ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி, அக்குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.