ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே முடியாது - அன்புமணி ராமதாஸ்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் உணவுத்துறை அமைச்சர் காமராஜை ஆதரித்து குடவாசல் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுதிரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் காமராஜ் தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து தமிழக முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மறுபிறவி எடுத்து மீண்டு வந்து வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் ஒரு விவசாயி, விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களை நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் கொண்டுவந்துள்ளார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் விவசாயி ஒருவர் முதலமைச்சராக வந்துள்ளார். எனவே எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும். டெல்டா பகுதி டெல்டா மண் புனிதமான மண். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு உணவளிக்கும் மண். இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என நானும் மருத்துவர் ராமதாசும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதேநேரத்தில் இந்த மண்ணை நாசமாக்க வேண்டும் என ஸ்டாலின் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டார். டெல்டா மண்ணை அழிப்பதற்காக செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்.
ஸ்டாலின் திமுகவினரை நம்பவில்லை பீகாரில் இருந்து வந்துள்ள பிரசாந்த் கிஷோரை தான் நம்பியுள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர் ராமதாஸின் 40 ஆண்டுகால போராட்ட தியாக வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர், அதை வழங்கியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை மறக்கக்கூடாது மறக்கவும் முடியாது. அதேபோல பின்தங்கிய அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம். அதுதான் சமூக நீதி. நமது கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பேசினார்.