தமிழகம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியின் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் ஓய்ந்தது. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூரைச் சேர்ந்த நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.