எத்தனை அவதூறு பரப்பினாலும் நிச்சயம் அதிமுக வெல்லும் : முதலமைச்சர் பழனிசாமி
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுகவின் துணைத் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசியவர், திமுக தலைவர் ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி அடையும் என கனவு காண்பதாக கூறினார். மேலும், கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வலிமையை இன்றைய பிரச்சாரக்கூட்டம் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். எத்தனை அவதூறுகளை பரப்பினாலும் நிச்சயம் அதிமுக தான் வெற்றி பெறும். காரணம், அதிமுக கூட்டணி தான் நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டும் என உழைக்கும் பாஜகவோடும், வலிமையான பல்வேறு கட்சிகளோடும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவிருக்கிறோம்.
திமுகவை போல் குடும்ப அரசியல் செய்கின்ற கட்சி அதிமுக அல்ல. தமிழகத்தையும் தேசத்தையும் வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்வது எங்கள் கூட்டணி தான். தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்பும் நிறைந்த கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர் வறட்சியின் போது விவசாயிகளுக்கு வறட்சி நிதி வழங்கிய ஒரே அரசு அதிமுக தான். மானிய விலையில் மகளிருக்கான இருசக்கர வாகனம், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் என மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்று பேசினார்.