திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் உங்களின் கதை முடிந்து விடும் : ராமதாஸ்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- ஆக்கும், காக்கும், அழிக்கும் சக்தி பெண்களுக்கு உண்டு. பெண்களை, திரௌபதியை கடவுளாக வணங்கும் மண் இது. 2ஜி மூலம் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததாக சிறை சென்று விட்டு வந்தவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி இழிவாக பேசுகிறார்.
அதிமுகவில் கிளை செயலாளராக இருந்து எடப்பாடி பழனிசாமி, படிப்படியாக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியுள்ளார். அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியாகும். பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கானது. திமுக தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டது. முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுபவரை டெபாசிட் கூட வாங்க மாட்டார். நான் சொல்லித்தான் ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கினார் கருணாநிதி.
எடப்பாடி தொகுதியில் பெண்கள் ஓட்டு அதிகம். வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே கையை வைத்து வரம் பெற்றவன் சோதிக்க முயன்றதை போல, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அழித்த கதைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். திமுகவுக்கு வாக்களித்தால், உங்களின் கதை முடிந்துவிடும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார்.