பணப்பட்டுவாடாவை படம்பிடித்த செய்தியாளரை அடித்த திமுகவினர்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ஏப்., 4ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் விறுவிறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளையும் அரசியல் பிரமுகர்கள் ஜரூராக செய்து வருகின்றனர். அதில், ஒரு சிலர் எதிர் தரப்பினரின் கைகளில் சிக்கி விடுகின்றனர்.
அந்த வகையில், திமுக முதன்மை செயலாளரும், திருச்சி தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கே.என். நேரு, தனது தொகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்களின் தபால் வாக்கிற்கு பணம் கொடுத்து, கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். இதனால், அந்தத் தொகுதியில் தேர்தல் நடப்பதில் சந்தேகமாகியுள்ளது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை படம்பிடித்த தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளார். இதனை தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட திமுகவினர் ஆத்திரத்தில், செய்தியாளரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை அங்கிருந்து நவநீதம் நகரில் உள்ள திமுக பிரமுகரின் வீட்டிற்கு தூக்கிச் சென்று, கண்மூடித் தனமான அடித்ததுடன், அந்த வீடியோவை அழிக்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திமுகவினர் இந்த அராஜக செயலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர், இது தொடர்பாக மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், திமுக வேட்பாளர் ஐயப்பனின் ஆதரவாளர்கள் 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை விசாரித்து வருகிறது.