பொலிஸாரின் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸார் தாக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவருடைய உறவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
களுபோவில பாடசாலை வீதியைச் சேர்ந்த சுதந்திர திசாநாயக்க எனும் நபரை கல்கிஸ்ஸ பொலிஸார் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மார்ச் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பொலிஸார் தன்னை தாக்கியதாக கூறி குறித்த நபர் மார்ச் மாதம் 21 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
குறித்த நபரை நேற்று முன்தினம் அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.