
யாசகரின் சாவுக்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
பெல்லாரி மாவட்டம் ஹுவின ஹடகலி என்னும் பகுதியில் பசவா (45) என்னும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் வசிக்கும் நபர்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டு வாங்குவாராம். அதற்கு மேல் யாராவது பணம் கொடுத்தாலும் அதனைப் பெற்றுக் கொள்ள மாட்டாராம். மேலும், மக்கள் கொடுக்கும் ஒரு ரூபாயை சேகரித்து பசிக்கும் போது, கடைகளில் ஏதேனும் வாங்கி சாப்பிடுவார் என்று கூறப்படுகிறது.
யார் வீட்டு முன்பாவது சென்று நின்றால், அவர்கள் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டு கொள்வார் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். யாருக்கும் எந்த தொல்லையும் இல்லாமல் அங்கு வசித்து வருவதால், இவருக்கு அங்கு உதவ நிறைய பேர் உருவாகியுள்ளனர். மேலும், பசவாவின் முகத்தைப் பார்த்து சென்றால், போன காரியம் நல்லபடியாக நடக்கிறது என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமடைந்த பசவாவை, அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமடைந்த பசவாவை, அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார்.
பிரபலங்கள் போல பசவாவின் இறுதிச் சடங்கை பிரமாண்டமாக நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக, பசவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை நகரம் முழுவதும் ஒட்டினர். அதுமட்டுமல்ல, கிராமத்தின் பொது இடத்தில் மக்கள் அஞ்சலிக்காக பசவா உடல் வைக்கப்பட்டது. அஞ்சலிக்கு பிறகு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் பசவாவின் உடல் சுமந்து செல்ல, இசை முழக்கத்துடன் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளுடன் அவரது இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.