வின் டிவி நிறுவனத்திற்கு சீல்
நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி இயக்கத்தின் தலைவரும் பாஜக வேட்பாளருமான தேவநாதனுக்கு சொந்தமான வின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் தலைவராக தேவநாதன் யாதவ் உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ. 525 கோடியை ஏமாற்றிய புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேவநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் உள்பட 3 பேரின் அலுவலகங்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். தேவநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதில் தேவநாதன் அலுவலகத்தில் ரூ 4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் சிக்கின. இதையடுத்து மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் தேவநாதனுக்கு சொந்தமான வின் டிவி சேனல் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்தனர்.