நாடாளுமன்றத்திற்கு சென்று உதயநிதி புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர் - வானதி
ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டுறவை அடிப்படையாகக் கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உண்மையில் தமிழக மக்களின் எதிர்காலத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். அனைத்து மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அதிகாரமிக்க திட்டக்குழுவான நிதி ஆயோக்கில் பங்கேற்று ஒத்துழைப்பதன் மூலம், நமது தமிழகத்தின் கருத்துக்களையும் தேவைகளையும் மத்தியக் குழுவில் பதிவு செய்து அதற்கான பலன்களைப் பெற முடியும்.
ஆனால், தேவையற்ற அரசியல் காரணங்களைக் காட்டி, இந்த நல்ல வாய்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்துவது முறையல்ல, இது ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட.இது ஒருபுறமிக்க, மத்திய அரசுடன் கைகோர்த்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடவேண்டிய, தமிழக எம்பி-க்களோ, கொடி பிடிப்பதற்கும் கோஷமிடுவதற்கும் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.
தமிழக மக்களின் தேவைகளைப் பற்றி விவரிப்பதை விட்டுவிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிரான போக்கை முன்னெடுக்கும் திமுக அரசு ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன்களையும் தேவைகளையும் குழித்தோண்டி புதைக்க கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.