நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1943 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் இடைநிலை கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பூர்த்தி செய்தார்.
அதன்பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.
இதனையடுத்து நாடு திரும்பிய அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
1962 ஆம் ஆண்டு விக்ரமபாகு கருணாரட்ன, லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1972 ஆம் ஆண்டில் அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும், 1972 ஆம் ஆண்டில் சம சமாஜக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைமையுடன் முரண்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
1977ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோருடன் இணைந்து புதிய சமூக சமத்துவக் கட்சி என்ற நவ சம சமாஜக் கட்சியை ஆரம்பித்தார்.
விக்ரமபாகு கருணாரட்ன, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தமது காலத்தில் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
000