எந்த நேரத்திலும் போர்...! தைவான் அருகே ஏவுகணைகளை வீசிய சீனா
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டன. அப்போதிருந்து, தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடடாக அழைத்து வருகிறது. அதேசமயம், சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என கூறி வருகிறது. அதாவது தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. தைவானுடன் அமெரிக்கா அதிகாரபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தைவான் உறவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது. தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார்.
தைவான் அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. தைவானைக் கைப்பற்றுவதற்கு, சீனா அதிக எண்ணிக்கையிலான படைகள் , கவச வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்ல வேண்டும். இது கடல் வழியாக மட்டுமே சாத்தியமாகும்.பல அடுக்கு கடல் பாதுகாப்பை மீறி சீன வீரர்கள் தைவானை அடைந்தாலும் தைவான் கொரில்லா போருக்கு தனது நகரங்களை தயார் செய்துள்ளது.35 லட்சம் தைவானியர்கள் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். இந்தநிலையில் சீனா இன்று தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.