கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது - CID யில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்
நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பி அதனை அங்கீகரித்ததாக முன்னாள் அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், சுசில் பிரேம்ஜயந்த மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.
அப்போது அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்ட போதிலும், குறித்த தரப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை எனச் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் லக்மி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 13 பேர் இதுவரையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பில் பிரதி மன்றாடியர் நாயகம் லக்மி கிரிஹாகம, மன்றுக்கு விளக்கமளித்தார்.
அவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ள அமைச்சர்களில், சிலர் 30 வருடங்களும், சிலர் 20 வருடங்களும் சிலர் 10 வருடங்களும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பிரதி மன்றாடியர் நாயகம் லக்மி கிரிஹாகம தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரினதும் வாக்குமூலங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட பொதுவான கருத்து தொடர்பில் மன்றில் எடுத்துரைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் வாக்குமூலத்தை ஆராயும் போது, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் போது அமைச்சரவைச் செயலாளர் மற்றும் அதனை முன்வைக்கும் அமைச்சர் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்வைத்த வாக்குமூலம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் போது அதன் முக்கிய பொறுப்பு அமைச்சின் செயலாளரிடம் காணப்படுகின்றது.
அத்துடன் அமைச்சரவை பத்திரத்தைத் தாக்கல் செய்யும் அமைச்சுக்கான செலவுகள் தொடர்பில் ஏதாவது தேவைப்பாடு காணப்படுமாயின் செயலாளர் அது தொடர்பில் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று, அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரித்த அமைச்சருக்கு அவற்றை வழங்க வேண்டும்.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அவற்றை ஆராய்ந்து, அதிலுள்ள தகவல்களில் ஏதேனும் சந்தேகம் நிலவுமாயின் மாத்திரமே அதில் கையெழுத்திட்டு அதனை அமைச்சரவையின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி, குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடியுடன் எரிபொருள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவியதாகச் சர்ச்சைக்குரிய அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக அமைச்சர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பிரதி மன்றாடியர் நாயகம் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்காரணமாக மருந்துகள் தொடர்பான முழுமையான தரவுகள் காணப்படாத போதிலும் வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த தகவல்கள் உண்மை எனவும், நாட்டில் நிலவிய தேவைப்பாட்டைக் கருத்திற் கொண்டு அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய அமைச்சர்கள் தெரிவித்ததாகவும் பிரதி மன்றாடியர் நாயகம் லக்மி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.