- · 5 friends
-
I

கற்கை நன்றே (குட்டிக்கதை)
காலை வேளை. பத்து மணி இருக்கும். தன் வீட்டு வாசல் வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் நாராயணன்.
அப்போது “சார் ….சார் ” என்று குரல் கேட்க திரும்பி பார்த்தார். கேட்டின் அருகே ஒரு பையன், (இருபது வயதுக்குள்தான் இருக்கும்) நின்று கொண்டு இருந்தான்.
“உள்ளே வாப்பா …..யார் நீ? என்ன விஷயம் ?
“சார். என் பெயர் மணி. கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் வருடம் படிக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும் சார். அதற்காக உதவி கேட்டு வந்துள்ளேன்” பேசிக்கொண்டே தன் ஃபைலைத் திறந்து சில பேப்பர்களை எடுத்து காண்பித்தான்.
அவற்றை வாங்கி மேலோட்டமாக படித்து பார்த்த நாராயணன் “சரிப்பா . கொஞ்சம் உட்காரு. இதோ வருகிறேன. என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன்” என்று உள்ளே சென்று இரு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார்.
“ரொம்ப நன்றி சார். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்று சந்தோஷமாக பெற்றுக்கொண்ட மணி கிளம்ப தெருப்பக்கம் திரும்பினான்.
“தம்பி மணி. ஒரு ஐந்து நிமிடம் என் கூட பேசிக் கொண்டிருப்பதில் உனக்கு ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன்”
“சரி சார்” என்றபடியே மீண்டும் வந்து அமர்ந்தான் மணி. உள்ளே திரும்பி மனைவியை அழைத்த நாராயணன் ஒரு டம்ளர் மோர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து “வெய்யில் காலத்துக்கு ரொம்ப நல்லது குடிப்பா” என்று உபசரித்தார்.
“சரி. இது வரை எத்தனை வீடுகளில் கேட்டாய் ; எத்தனை ரூபாய் கிடைத்தது” என்றார்.
“அதிகம் இல்லை சார், ஒரு பத்து வீடுகளில் கேட்டேன். சிலர் 20, 50 என்று கொடுத்தார்கள். சிலர் எனக்கு இப்போ நேரமில்லை என்றும் சிலர் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க என்றும் கோபப்பட்டு பிச்சைக்காரனை விரட்டுவது போல விரட்டுகிறார்கள்.”
“ 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று நினைத்துக்கொண்டேன் சார்" என்று லேசாக கண் கலங்கினான்.
“பிச்சை எடுத்தாவது படிக்கணும் என்று நீ நினைக்கிறாய் சரிதான். ஆனால் வேறு விதமாக யோசி. “பிச்சை புகினும் கற்கை நன்றே” – என்பது கல்வியின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக, கல்வி எல்லாவற்றிலும் மேலானது என்பதை வலியுறுத்தும் வகையில் சொல்லப்பட்டது. ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாப்பாட்டுக்கே வழியில்லை ; பிச்சை எடுத்துதான் சாப்பிட்டாக வேண்டும் என்ற நிலைமை வந்தாலும் கல்வி கற்பதை விட்டு விடக்கூடாது என்பதுதான் உண்மையான அர்த்தம்.
“வருத்தப்படாதே. பணம் இருக்கும் சிலரிடம் கொடுக்கும் மனம் இருக்காது; கொடுக்க மனம் இருப்பவர்களுக்கு கையில் பணம் இருக்காது என்று கேள்விப்பட்டது இல்லையா ? ஆனால் ஒரேயடியாக நாம் அவர்களை குற்றம் சொல்லவும் முடியாது. ஒரு நாளில் படிப்பிற்கு, கல்யாண செலவிற்கு, வைத்தியத்திற்கு, கோவில் திருவிழாவிற்கு, அனாதை ஆசிரம செலவுக்கு என்று உதவி கேட்டு நிறைய பேர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் அப்போது வார்த்தைகள் இப்படித்தான் வந்து விழும். உதவி கேட்கும் நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதுதான் உலக இயல்பு என்ன செய்வது? ” என்றார்.
“மற்றவர்களின் அலட்சியத்திற்கு ஆளாகாமல் உன் தேவைகளை நீயே பார்த்துக் கொள்ளலாம்; அதற்கு சுணக்கம் இல்லாமல் கொஞ்சம் உழைக்கும் எண்ணம் வேண்டும்; ஜெயிப்போம், முன்னேறுவோம் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும்.”
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவரை புரியாமல் பார்த்தான் மணி.
“சின்னச் சின்ன வேலைகளை செய்து சம்பாதித்து உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். யாரிடமும் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு சம்மதம் என்றால் சொல்லு. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால் அதையே நீ முழு நேர வேலையாக எடுத்துக்கொண்டு உன் படிப்பை கோட்டை விட்டு விடக்கூடாது. என்ன சொல்கிறாய்?”
“அப்படி என்ன வேலை சார் உடனே கிடைக்கும்?”
“ஏன் கிடைக்காது? பொய் சொல்ல கூடாது; திருடக்கூடாது ; மற்றவர்களுக்கு உதவியாக, முக்கியமா உன் தன்மானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வேலை செய்யலாம்,
காலையில் பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் போடலாம். அதிக பட்சமாக ஒரு மணி நேரம்தான் ஆகும்.
இன்னிக்கு நீ வருவதற்கு சற்று முன்பு வாடிக்கையான மளிகை கடையில் சில சாமான்கள் ஆர்டர் கொடுத்தேன். பேக்கிங் செக்க்ஷன்ல ஆள் குறைவாக இருக்காங்க. சாயந்திரத்துக்குள்ள அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று கடைக்காரர் சமாதானம் சொன்னார். நீ விருப்பப்பட்டால் தினம் ஒரு ரெண்டு மணிநேரம் அங்கு வேலை செய்யலாம். நான் அவரிடம் பேசுகிறேன்.
இது முழு ஆண்டு தேர்வு முடிந்து அடுத்த வருடத்திற்கு தயாராகும் நேரம். பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் புத்தகங்களுக்கு அட்டை போட்டு ரெடி செய்வது என்பது பெரிய விஷயம். நீ அவர்களுக்கு அதை முடித்து கொடுக்கலாமே. நீ ஒத்துக்கொண்டால் நான் இந்த தெருவில் தேவை உள்ளவர்களிடம் பேசுகிறேன். நீ எங்கள் வீட்டில் அமர்ந்தே வேலை செய்யலாம்.
வாய்ப்புகள் எப்போதும் வாசல் கதவை தட்டாது ; நாமும் தேடிச் செல்ல வேண்டும் . யோசித்துப்பார்.
ஒவ்வொரு வீட்டிலும் சென்று உதவி கேட்டு அலைவதை விட, அந்த நேரத்தில் இந்த வேலைகளை செய்வதால் உனக்கு கொஞ்சம் வருமானமும் வரும். உன் தன்மானத்திற்கு எந்த குறைவும் வராது. மற்றவர்களின் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டாம். உனக்கு இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கு. அதற்கான செலவுகளுக்கு என்ன செய்வாய் ? கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை ; போராடாமல் வெற்றிகள் இல்லை”.
“சார் நீங்க ஸ்கூல் வாத்தியாரா?”
“ஏன்பா. அட்வைஸ் பண்றதை வைத்து அப்படியொரு முடிவுக்கு வந்து விட்டாயா. நான் பேங்க்-ல வேலை பார்த்து சென்ற வருடம்தான் ஓய்வு பெற்றேன். என்னால் இயன்ற உதவியை செய்தேன். எனக்கு தோன்றிய எண்ணத்தை சொன்னேன். அவ்வளவுதான். நான் எந்த வகையிலும் உன்னை வற்புறுத்தவில்லை. மீன் வாங்கி கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது நல்லதல்லவா” என்று சிரித்தார் நாராயணன்.
“ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு வாத்தியார்தான். ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன படி செய்கிறேன் சார். என்னை எப்போது மளிகை கடைக்கு அழைத்து செல்கிறீர்கள்” என்றான் மணி உற்சாகமாக.
“ரொம்ப சந்தோசஷம். பூமர் என்று நினைக்காமல், நான் சொன்னவற்றை நல்ல முறையில் புரிந்து கொண்டாயே அதற்கு நானும் உனக்கு நன்றி கூறுகிறேன்”.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே கேட்- ஐ திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஒருவர்.
“வாப்பா கோபால் ” என்றார் நாராயணன் .
“சார். இன்னிக்கு தண்ணீர்- டேங்க் கிளீன் பண்ண வரேன் என்று சொல்லி இருந்தேன் என்னோட எப்போதும் வரும் பையன் ஏதோ அவசர வேலையாக ஊருக்கு போய் இருக்கிறான் சார். வருவதற்கு இன்னமும் ரெண்டு நாளாகும் போல. அதை சொல்லத்தான் வந்தேன். உங்களுக்கு பரவாயில்லையா சார்” என்றார் அந்த கோபால்.
நாராயணனின் அருகே வந்த மணி “சார். வாய்ப்பு வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருக்கிறது. இவருக்கு ஓ.கே. என்றால் அவருடன் சேர்ந்து நான் தண்ணீர் – டேங்க் கிளீன் செய்கிறேன். கேட்டு சொல்லுங்க சார்” என்றான் மெதுவாக.
“நன்றே செய் ; அதுவும் இன்றே செய் என்ற எண்ணமா. ரொம்ப மகிழ்ச்சி” மணியின் முதுகில் தட்டி கொடுத்த நாராயணன்.
“தம்பி எனக்கு தெரிந்த பையன்தான். உன்னுடைய அசிஸ்டன்ட் வராத பட்சத்தில் இந்த பையனை உதவிக்கு வைத்துக்கொண்டு வேலையை தடையில்லாமல் முடித்து விடலாமே அந்த பையனுக்கு கொடுக்கும் பணத்தை இவனுக்கு கொடுத்து விடு கோபால்” என்றார் .
“நீங்களே சொன்ன பிறகு என்ன சார். அப்படியே செய்து விடலாம். ரெண்டு பாக்கெட் தண்ணி மட்டும் பிடித்து வைத்துக்கொள்ளுங்க. க்ளீனிங் ரெண்டு மணி நேரத்தில் முடித்து விடலாம்” என்றார் கோபால்
“சரிப்பா. நீங்க வேலையை ஆரம்பிங்க. நானும் மாமியிடம் உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்கிறேன். நேரம் சரியாக இருக்கும். மதியத்திற்கு மேல் மற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் மணி. நம்பிக்கையுடன் இரு” என்று புன்னகை செய்தார் நாராயணன்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·