·   ·  2119 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

'கேரிபேக்' மனிதர்கள் (குட்டிக்கதை)

சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை... முத்து முத்து ஆசை... முடிந்து வைக்க ஆசை...' சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி, சமையலறை ஜன்னல் வழியாக, 'டிவி'யில் ஓடும் பாடல் காட்சியை, ஆசையாய் வேடிக்கை பார்த்தாள் கவிதா.

ப்ளஸ் டூ முடித்த கையோடு, ஆறு மாசம் தையல் வகுப்புக்கு போய், தலையணை உறை தைத்து பழகுவதற்குள், ரகுவை திருமணம் முடித்து, மாமியார் வீடு வந்த கவிதாவிற்கு, இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகள், மனதில் ஏராளமாய் இருந்தன.

திருமணமான புதிதில், மாலையில், கணவன் தனக்காக எதையாவது ஆசையாக வாங்கி வருவான் என எதிர்பார்ப்பாள் கவிதா. ஆனால், அவனோ வெறுங்கையை வீசியபடி வருவான்.

இதையெல்லாம் கவனித்த அவன் அம்மா தான் ஒரு நாள், 'ஏந்தம்பி... புதுப் பொண்டாட்டி வீட்ல இருக்கா... வரும் போது அவளுக்கு ஏதும் தித்திப்பும், அரைமுழம் பூவும் வாங்கியாந்தா என்னவாம்...' என்றாள் சிறு எரிச்சலுடன்!

அம்மாவுக்கு பதில் சொல்லாமல், உடை மாற்றி, வார இதழுடன் மொட்டை மாடிக்கு போய் விட்டான்.

பெருமூச்சு விட்டாள் கவிதா; அவளை அறியாமல் கண்கள் கசிந்தது.

ரகுவாவது கையில் சுமையோடு வருவதாவது... கல்யாணப் பந்தலில், அவன் கையில் இருந்த பூச்செண்டையும், கவிதா கையில் திணித்துவிட்டு, அவன் முன் நடக்க, எந்த வரலாற்றிலும் இல்லாத கணக்காய், இரண்டு கையிலும் பூச்செண்டோடு கவிதா பின்தொடர்ந்த கதை அதற்குள்ளா மறந்திருக்கும்!

'என்னங்க... பசங்க ஏதோ, புக்கு கேட்குறாங்க, வரும் போது வாங்கிட்டு வந்துடறீங்களா...' என்று, கணவருக்கு எதிரில் நின்று, கவிதா கேள்வி கேட்க பழகுவதற்குள், பத்து ஆண்டுகள் ஓடோடி விட்டது.

ஆனால், அவனோ, இட்லியை விள்ளி, சாம்பாரில் நனைத்து வாய்க்குள் திணித்தவாறு, கவிதாவை அலட்சியமாய் பார்த்து, 'பீரோவில பணமிருக்கு; எடுத்துக்க. குழந்தைகளை அழைச்சுட்டுப் போயி, வேணும்கிறத வாங்கிக் கொடு. அதவிட்டுட்டு, ஆர்டர் போடாத! உனக்கு தெரியாதா... நான் கையில் எதையும் எடுத்துட்டு வர்ற பழக்கத்தை வச்சுக்கிறதில்லன்னு...' என்றான்.

இருக்கட்டுங்க... ஆனாலும், அந்த கடை உங்க ஆபிசுக்கு பக்கத்துல தான் இருக்கு. வர்ற வழி தானே... நாங்க போய் வர வீண்செலவு, அலைச்சல்...' தயக்கமாய்த் தான் கூறினாள் கவிதா.

'அலைஞ்சு பாருங்க... அப்ப தான் குடும்ப பொறுப்பு புரியும்; ஒரு மனுஷன், ஒரு வேலைய செஞ்சாத்தான் அது சரியா வரும். இந்த குடும்பத்துக்கு நான் சம்பாதிச்சு தர்றேன்; மத்த வேலைகளை நீ தான் பாத்துக்கணும். தவிர, மனசுலயும், கையிலயும், சுமைகளை தூக்கிட்டு அலையுற, 'கேரி பேக்' வாழ்க்கை, எனக்கு எப்பவும் பிடிக்கறதில்ல...' என்று, கூலாக சொல்லி, எழுந்து போனான் ரகு.

கவிதாவிற்கு, ரகுவை நன்றாக தெரியும். நல்லவன் தான்; ஆனால், நல்லதனத்திற்கு கலசமாய் விளங்க வேண்டிய பற்றுதல், அவனிடம் இருக்காது.

அவனுடைய எல்லா பரிவர்த்தனைகளும், பணம் தருவதோடு முடிந்து போகும். ஆயிரம் ஆயிரமாய் பணம் தருவதை விட, அரை முழம் மல்லிகைப் பூவில் இருக்கும் அன்னியோன்யம், ஆயுளுக்கும் மணக்கும் என்பதை அறிந்தும், அறியாமல் நடந்து கொண்டான்.

காலப்போக்கில், இந்த சங்கடங்களுக்கு நெளியாமல் வாழ கவிதாவும், அவள் குழந்தைகளும் பழகிக் கொண்டனர்.

கவிதா போன் செய்து, விஷயத்தை கூறியபோது, ரகுவிற்கு உண்மையில் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மகன் பத்தாம் வகுப்பில் பாஸ் செய்த விஷயம் தெரியும் என்றாலும், பள்ளியில், அவன் தான் முதலாவது என்பதை அறிந்து, பூரித்துப் போனான். உறவுகளுக்கு எல்லாம் வலிய போன் செய்து, தகவலை கூறி சந்தோஷப்பட்டான்.

அந்த மகிழ்ச்சியுடன் ரகு வீட்டிற்கு வந்த போது, கதவு பூட்டியிருந்தது. பத்து நிமிடத்திற்கு பின், கவிதாவும், குழந்தைகளும் கை நிறைய பொருட்களுடன் வந்தனர்.

''வந்து நேரமாச்சா...'' பரபரப்பாய் கதவைத் திறந்தாள் கவிதா.

''அது கிடக்கட்டும்... நான் சொன்னா மாதிரி, நரேஷுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கித் தந்தியா... ரெண்டு பேரும் சந்தோஷப்பட்டாங்களா...'' ஆர்வமாய் கேட்டவனை, வெறுமையாய் பார்த்தாள் கவிதா.

''குழந்தைங்க கேட்டதை வாங்கித் தர்றத விட, அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நீங்க புரிஞ்சுக்கிறதுல தான், அவங்க உண்மையான சந்தோஷம் இருக்கு,'' என்றாள் கவிதா.

''என்ன பேசற கவி... இத்தன வருஷத்துல, அவன் கேட்டு, நான் எதையாவது மறுத்திருக்கனா இல்ல, நம்ம குடும்பத்துல யாருக்காவது, நான் என் கடமைய செய்யத் தவறி இருக்கேனா...'' என்று கேட்டான் அழுத்தமான குரலில்!

வாய் விட்டு சிரித்து, ''நிச்சயமா இல்ல... நாங்க கேட்டதெல்லாம் வாங்கிக்க, பணம் தந்துடுவீங்க; அதை மறுக்கல. ஆனா, நரேஷுக்கு என்ன பிடிக்கும்ன்னு, நீங்களே தெரிஞ்சு வச்சு, வாங்கிட்டு வந்தா, அவன், எவ்வளவு சந்தோஷப்படுவான்னு உங்களுக்கு புரியாதுங்க,'' என்றாள்.

''எல்லாம் ஒண்ணு தானே...''

''எப்படிங்க ஒண்ணாகும்... பாலும், மோரும் உறைய விட்டா தயிராகும்கறது பொது நீதி. அதுக்காக, ஒரு அண்டா பாலுக்கு, அரை ஸ்பூன் மோர் விட்டுட்டு, அடுத்தநாள் கட்டித் தயிர் கிடைக்கும்ன்னு காத்திருக்கறது எப்படி புத்திசாலித்தனம் ஆகும்... என்னவோங்க, குழந்தைங்க வளரும் போதே நம்முடைய பாசத்தைக் காட்டி, அதை, அவங்க உணர வச்சுடணும். அதை விட்டுட்டு, அவங்க வளர்ந்த பின், நாம பாசத்தைக் காட்டினா, அதை கவனிக்க அவங்களுக்கு நேரமிருக்காது,'' என்றாள். ஆனால், புகை படிந்திருந்த அவன் மனதிற்குள், அவள் வார்த்தை வெளிச்சங்கள், ஊடுருவிச் செல்லவில்லை.

'இவ கிடக்கிறா... பாசத்தை, மனசுல சுமக்கணும்; அதைவிட்டுட்டு, கையில பொருளா நிரூபிக்கணுமா என்ன... சுமக்க பழக்கினா, காலம் பூராவும், எதையாவது சுமந்துட்டு திரியணும்...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

காலம் உருண்டோடியது. நரேஷின் படிப்பு மற்றும் வேலை, ஸ்ரீயின் கல்யாணம் என்று, எல்லாம் கன கச்சிதமாய் நடந்து முடிந்திருந்தது.

ஐம்பது வயதை கடந்திருந்த நிலையில், ரகுவிற்கு சர்க்கரையும், பி.பி.,யும் நண்பர்களாயின. மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனுக்கு, தன் உணர்வுகளைப் பற்றி பேசக்கூட யாருமில்லை.

குழந்தைகளோடு ஒட்டியே வாழ்ந்த கவிதா, இப்போதும் ரொம்ப, 'பிசி'யாக இருந்தாள்.

ஆபிசுக்கு போய் வருவது, மிகுந்த சிரமமாக இருக்கிறதென்று, ஆபிசுக்கு பக்கத்திலயே, தனி வீடு பார்த்து, தன் மனைவியோடு சென்று விட்டான் மகன் நரேஷ்.

வாரத்தில் ஆறு நாட்கள், மகன் மற்றும் மகள் வீட்டில் இருப்பது கவிதாவிற்கு வழக்கமாகிப் போனது. இதனால், ரகுவின் உலகம் தனிமையானது. தினம், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது, மாத்திரை வாங்கி வருவதும், கவிதா வீட்டில் இல்லாமல் போனால், தனக்கு சாப்பாடு வாங்கி வருவதுமே, வேலையானது.

கையிலும், மனதிலும் சுமையை தூக்க விரும்பாமல், மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும்படி, 'க்ளீன் லைப்' வாழ்க்கை வாழ்ந்த தனக்கு, இப்படியொரு நிலைமையாகிப் போனதே...' என்று, கழிவிரக்கம் ஏற்பட்டது அவனுக்கு!

'முதுமையும், பிணியும் தன்னை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டதே...' என்று வேதனைப்பட்டு, 'கவிதா வரட்டும் இன்று இதற்கு முடிவு கட்டுகிறேன்...' என்று காத்திருந்தான்.

இரவு, 8:00 மணிக்கு மேல், மகன் நரேஷோடு வந்தாள் கவிதா. வாசலில் நின்று பேசி விட்டு, அப்படியே கிளம்பி விட்டான் நரேஷ். உள்ளே வந்து அப்பாவை பார்க்க வேண்டும் என்று, அவனுக்கு தோன்றவில்லை; கவிதாவும் கூறவில்லை.

''வந்து நேரமாச்சா... நரேஷ் வீட்ல இருந்து, வெஜிடபிள் புலாவ் செய்து கொண்டாந்திருக்கேன்; சாப்பிடுறீங்களா?'' என்று கேட்ட மனைவியை, குரோதமாய் பார்த்து, ''என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா... எனக்கு கொஞ்சம் வியாதி வந்ததும், உங்களுக்கெல்லாம் கேவலமா போய்டுச்சா... உம் புள்ள, வாசல் வரை வந்தவன், ஒருநடை உள்ளே வந்து, 'என்னப்பா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்காம போறான்; நீயும் கூப்பிடல, என்ன திமிர்தனம் செய்றீங்களா அம்மாவும், மகனும்...'' என்றான் கோபத்தோடு!

அவனை பரிதாபமாய் பார்த்தாள் கவிதா.

''அப்படியெல்லாம் இல்லீங்க... நீங்க ஏதோ விபரீதமா கற்பனை செய்துட்டு இருக்கீங்க... நரேஷ் எவ்ளோ கவலைப்பட்டான் தெரியுமா...'' மேற்கொண்டு பேச முற்பட்டவளை, கை உயர்த்தி தடுத்து, ''அடடா... எத்தனை கரிசனம் அப்பா மேல... பாசம் இருக்குன்னு சொல்லிட்டா பத்தாது; அதை சம்பந்தபட்டவங்களுக்கு புரிய வைக்கத் தெரியணும்,'' என்று கூறிய ரகுவை, விழிகளை விரித்து, உற்று பார்த்தாள் கவிதா.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய், விழிகளை தாழ்த்தினான் ரகு.

''மன்னிச்சுக்கங்க... உங்க அளவுக்கு, வாழ்க்கையில எனக்கு அனுபவம் இல்ல; ஆனாலும், என்னால உணர முடிஞ்சது. ஆனா, நீங்க பணம் குடுக்கிறது மட்டும் தான், உங்க கடமைன்னும், பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு நீங்க தர வேண்டிய அன்பை, கிரெடிட் கார்டும், ஏ.டி.எம்., கார்டும் தந்துடும்ன்னும் நினைச்சீங்க... அதனால தான், அவங்களுக்கு உங்கள விட, அந்த கார்டுங்க மேல பிடிப்பு அதிகமா இருக்குன்னு தோணுது.

''எதுக்கெடுத்தாலும், 'கேரி பேக்' வாழ்க்கை பிடிக்காதுன்னு சொல்லிட்டே இருந்தீங்க; இப்போ உங்ககிட்ட, 'கேரிங்கா' யாரும் இல்லையேன்னு வருத்தப்படுறீங்க.

''சுமக்க தயங்கறது, நல்ல மனுஷ பண்பு இல்லீங்க. ஒரு ஆணைப் போல, பெண்ணும் சுமக்க தயங்கினா, உலகமே விருத்தி இல்லாம போயிடும். இந்த உலகமே, தன்னை யாராவது, எதன் பொருட்டாவது, சுமந்துட்டே இருக்கணும்ன்னு தான் பிரியப்படுது! நாம நடமாடும் போது, நாலு பேரை சுமந்தா தானே, நம்மள கடைசியா சுமக்க, நாலு பேரு ஓடி வருவாங்க,'' என்று அமைதியாய் கூறினாள் கவிதா. ரகுவிற்கு இதுவரை இல்லாத சுமை, மனசில் குடிகொண்டது.

மறுநாள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன், கோவிலை ஒட்டிய பூக்கடையில், முல்லைப்பூவை பார்த்தான்.

கவிதாவிற்கு முல்லைச் சரமென்றால், ரொம்ப பிடிக்கும். அதைப்பற்றி அறிந்திருந்தும், இத்தனை காலமா. வாங்கிக் கொடுக்க தோன்றாமலே வாழ்ந்து விட்டான். இன்று, அனிச்சையாய் வண்டி, கடையின் முன், 'பிரேக்' அடித்து நின்றது.

முதல் முறையாக மனைவிக்கு பூ வாங்கியவன், திரும்பி நடக்கும் போது அந்த நெடிய நீண்ட சாலையை கவனித்தான்.

இரு மருங்கிலும், மனிதர்கள்... அவர்கள் எல்லாருடைய கைகளிலும், ஏதாவது ஒரு வகையில், எதோ ஒரு பொருளை, சுமந்தபடி தான் சென்றனர்.

'கேரி பேக் மனிதர்கள்...' என, தனக்குள் மெதுவாய் கூறி, சிரித்தபடி, அவர்களில் ஒருவனாக கலந்தான் ரகு!

  • 416
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங