அரபு நாடு ஒன்றிற்குச் சென்றிருந்த மாதவன், இரண்டு வருடத்தின் பின்பு விடுமுறையில் வந்தபோது, மாதவியும் அவனின் குழந்தை தனுவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அவன் நின்ற அந்த ஒரு மாதமும் அவர்கள் இருவருக்கும் அது பொற்காலமாகவே இருந்தது.அவனும் அவர்களுக்கான வீட்டைக் கட்டிக் கொடுத்திருந்தான். ஒரு சில தங்க நகைகள் கூட செய்து கொடுத்திருந்தான்.மாதவியைப் பார்த்து அயலவர்கள் பொறாமைப்படும் போதெல்லாம் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாள் அவள்.புதிய வீடும் புதிய நகையும் வாங்கித் தந்த கணவனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், அவன் நிற்கும் வரையில் அவனை எல்லாவகையிலும் நன்கு கவனித்துக் கொண்டாள்.இனி அடுத்த மூன்று வருடங்கள் திரும்பி வரமுடியாது என அவன் சொல்லியதால், அவனுக்குத் தேவையான பலகாரங்களையும் செய்து கட்டிக் கொடுத்தாள் மாதவி .பிரியும் நாள் வந்தபோது, தானும் பிள்ளையும் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்புவதாக மாதவி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், மாதவன் மறுத்து விட்டான்.தான் போன பின்னர் இருவரும் தனியே திரும்பி வருவது ஆபத்தானது என்று சொல்லித் தானே போய் வருவதாகச் சொல்லிக் கொண்டான்.அவனும் தங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறான் என மாதவியும், அவனைக் கண்ணீர் மல்க, இறுதியாகக் கட்டிப் பிடித்து வழி அனுப்பி வைத்தாள்.அவ்வளவு நாளும் தான் கேட்பதை எல்லாம் வாங்கித் தந்த தந்தையைப் பிரிய மனமின்றி அழுது ஆர்ப்பாட்டமே செய்து விட்டிருந்தாள் தனுக்குட்டி.அவனும் மகளுக்கு இறுதியாக நிறைய முத்தங்கள் கொடுத்து, அங்கு போய் மிட்டாய் அனுப்பி வைப்பதாக அவளுக்கு ஆசை காட்டி, அவளைச் சமாதானப் படுத்தினான்.ஒருவழியாக எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு மாதவன் புறப்பட்டபோது , உருகி உருகி அழுது விடை கொடுத்தாள் மாதவி.ஒருநாள் கழிந்தபோது இன்னமும் மாதவன் போய்ச் சேர்ந்த தகவல் வரவில்லை என்பதை உணர்ந்த மாதவியின் மனம், பயத்தில் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.உடனடியாக அவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் சொல்லியது.இடையில் ஏதாவது பயணத்திட்டம் மாற்றப்பட்டு விமான நிலையத்தில் இருக்கிறாரோ ? என்ற சந்தேகம் ஏற்படவே, அடுத்த நாளும் பொறுத்துப் பார்த்தாள்.ஆனால் இரண்டு நாட் கடந்தும் அவனைக் காணவில்லை என்ற நிலையில்தான், காய்கறிச் சந்தையில் மாதவனுடன் வேலை செய்யும் குமாரின் மனைவியைச் சந்தித்தாள் மாதவி.அப்போது தனது நிலமை பற்றி விளக்கியபோது, அவளும் உடனடியாகத் தனது கணவனான குமாருக்கு அழைப்பை எடுத்த போதுதான், குமார் அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான்.மாதவன் முகநூலில் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவளைப் பிடித்து இருப்பதாகவும் மாதவியை விவாகரத்துச் செய்து விட்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும், இனித் திரும்பி வரமாட்டேன் என்று சொல்லி விட்டே இங்கிருந்து சென்றதாகவும் அவன் கூறினான்.குமார் சொல்லச் சொல்ல மாதவிக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வருவதாக உணர்ந்தாள். அப்படியே மயங்கிச் சரியத் தொடங்கினாள்.அவள் மயங்கிக் கீழே விழப் போவதை உணர்ந்த மங்கை, மாதவியைத் தாங்கிப் பிடித்துக் கீழே இருத்தினாள்.அங்கிருந்த யாரோ ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து, மாதவியின் முகத்தில் தெளித்தபோது, கண் விழித்த மாதவி, அழத் தொடங்கினாள்.அவளின் அழுகையைப் பார்த்த மக்கள் கூட்டம், புதினம் அறிந்து கொள்வதற்காகக் கூடியது. பின்னர் மங்கை மூலம் தகவல் அறிந்து, மாதவனைத் திடடியவாறும், மாதவியைக் கவலையுடன் பார்த்தவாறும், செல்லத் தொடங்கினார்கள்.பின்னர் ஒரு முச்சக்கர வண்டியில் மாதவியை அவளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் மங்கை.வீட்டிற்கு வந்த மாதவி, தனது தாயிடம் விபரத்தைச் சொல்லி அவரின் மடியில் விழுந்து அழுது தீர்த்தாள்.அதேவேளை இந்தத் தகவலறிந்த அயலவர்கள் சிலர், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள்."இந்த ஒரு மாதமும் புருசனும் பொஞ்சாதியும் என்ன ஆட்டம் ஆடினதுகள். இவளுக்கு இது வேணும்தான். இனிச் சாப்பிட வழியில்லாமத் திரியட்டும். அப்பதான் அடங்குவாள்....!"நீண்ட காலத்தின் பின் வந்த கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்தது ஒரு குற்றம் போல் அயலவர்கள் முணுமுணுத்துக் கொண்டு போனபோது, மாதவியின் மனம் சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் அவளின் வேதனையைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் அவர்கள் வந்து சென்றார்கள்.வந்தவர்கள் காணாமற் போனபோது, வெறுமையை உணர்ந்தாள் மாதவி. அப்பா இன்னொருத்தியுடன் ஓடிப் போனது கூடத் தெரியாமல் "ஏனம்மா அழுகிறீங்க...?" என்று தனுக்குட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.நாட்கள் நகர்ந்தபோது, வெளியே செல்வதற்குக் கூடப் பயந்தாள் மாதவி. அதனையும் மீறி மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு வந்த பெற்றோர்களின் கேள்விகளும், அதற்குப் பதில் சொல்லியும்,பாதி செத்துப் போனாள் மாதவி.ஏதோ நடைப் பிணம் போல் ஒரு மாதம் ஓடியபோது, அவன் வாங்கித் தந்த தங்க நகையை அடகு வைத்து அடுத்த மாதத்தை நகர்த்தினாள் மாதவி.இனி இப்படியே அடகு வைத்துக் கொண்டிருந்தால் கடைசியில் பிச்சை எடுக்க வேண்டி வர வேண்டும் என எண்ணியவாறே, வேலை தேடத் தொடங்கினாள் அவள்.கிடைக்கும் கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியவள், ஆரம்பத்தில் காயங்களும் கொப்பளங்களுமாக நிறையவே துன்பப் பட்டாள்.இனி வலிகளையும் வேதனைகளையும் மகளுக்காகத் தாங்கித்தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தவளாக வறுமையிலும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாதவி......!கதை முற்றும்....!இது ஒரு உண்மைச் சம்பவம்!