பாண்டவர்கள் இராஜசூய யாகம் செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்திருந்தனர்.
"சபையில் முதலில் பூசிக்கத் தகுதியுடையவர் யார்?" என்று ஒரு வினா எழுந்தது.
பலகலை வல்லவனான சகாதேவன் எழுந்து, "ஆன்றோர்களே! அரசர்களே!"
"இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசை பெறத் தகுதியுடையவன் ஆவாள்?
"அத்தகையவன் நம்மிடையேயுள்ள கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அவருக்கே பூசை செய்வோம். அப்படிச் செய்தால், எல்லா உயிர்களுக்கும் செய்ததாகும்" என்றான்.
அவன் சொல்லியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிசுபாலன் என்பவன் மட்டும் எதிர்த்தான்.
அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர்.
நிலைமை கொந்தளிப்பானதை அறிந்த கண்ணன், தன் சக்கரத்தால் சிசுபாலனை அழித்தார்.
பின்னர், சகாதேவன் சொல்லியபடியே கண்ணனுக்கு முதல் பூசை செய்தனர்.
கண்ணள் ஓர் இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்த காட்சி அனைவருடைய கண்களுக்கும் விருந்தானது.
இராஜசூய வேள்வியின் பிற செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.
ஒருபுறம் பல்லாயிரவருக்கு விருந்து நடந்துகொண்டிருந்தது.
இரத்தின சிம்மாதனத்தில் வீற்றிருந்த கண்ணனைக் காணவில்லை. முதல் பூசை பெற்ற கண்ணன் எங்கே? என்று எல்லோரும் தேடலாயினர்.
நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.
இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் தென்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பாற் கொட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். முதற்பூசை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா என்று எல்லோரும் வியந்தனர்.
"கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் உள்ளனரே! நீ வந்து எடுக்கலாமா? முதற்பூசை பெற்ற உன்னை எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா! உடனே நிறுத்து. எச்சில்பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு, சிம்மாதனத்திலிருந்து திருக்காட்சி தரவேண்டும்!" என்று வேண்டிக் கொண்டனர்.
"எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? ஏவலர். எடுக்கும்போது, அக்கறையில்லாமல், இங்கும் அங்கும் ஒழுக விட்டுத் தரையைச் சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்தால் மறுபந்திக்கு இடையூறு நேராதா! ஆதலால், எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று ஏவலர்க்குச் செய்து காட்டினேன். சொல்லிக்காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே மிகப் பயனுடையதல்லவா?
"அதுமட்டுமா? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா? முதல் பூசை பெறுவதும் ஒரு தொழில் தான், எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில் தான். இரண்டுள்ளும் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூசை பெற்ற நான், எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதுவேனானால் பெற்ற முதல்பூசை தகுதிக்காகப் பெற்றதாகுமா? பகட்டுக்காகப் பெற்றதாகத் தானே இருக்கும்" என்றான் கண்ணன்.
கண்ணன் செயலும் வாக்கும் அவன் கூறியருளிய பகவத் கீதையின் சாரமாக அமைந்தது என்று ஞானிகளாகிய சகாதேவன் முதலியோர் பாராட்டினர்.
கண்ணனுக்கு முதல்பூசை தந்தது எவ்வளவு தகுதியானது என்று எண்ணி எண்ணி இன்புற்றனர்.
- 601