- · 5 friends
-
I

அரசனுக்கு குரு கூறிய விளக்கம் (குட்டிக்கதை)
அதிகாலையில் கண் விழித்த மன்னர் மகேந்திர பூபதிக்கு திடீரென ஒரு ஞானோதயம் வந்தது போல் இருந்தது.
அநித்தியமான லெளகீக வாழ்க்கையை விட்டுவிட்டு நித்தியமான ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் என்ன என்கிற கேள்வி மூளைக்குள் மாறி மாறி ஒலிக்க ஆரம்பித்தது.
மந்திரியை அழைத்தார். அந்த அதிகாலை வேளையிலும் மந்திரி மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தார்.
'மந்திரியாரே..! இந்த சுகபோக வாழ்வை அனுபவித்து அனுபவித்து சலித்து விட்டது. இந்த வாழ்வெல்லாம் மாயை என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கி நிற்கிறது.
அதனால் துறவறம் பூண்டு மனதிற்கு அமைதி தரும் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ளப் போகிறேன்.
பட்டத்து இளவரசனான எனது மகனின் முடிசூட்டு விழாவிற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்'
அதிர்ந்து போனார் மந்திரி.
தங்கத்தில் கூட குறை இருக்கலாம். ஆனால் மன்னர் மகேந்திர பூபதி ஆட்சியில் சிறிது கூட என்பதே யாராலும் சொல்ல இயலாது.
மக்கள் பசியால் வாடியது இல்லை. கொலை, கொள்ளை, களவு கிடையாது. உயிரை காவு வாங்கக்கூடிய பெருந் தொற்று நோய்கள் எதுவும் இல்லை. மொத்தத்தில் சொர்க்கம் என்றால் என்ன என்பதை மன்னர் மகேந்திர பூபதி ஆட்சியில் மக்கள் இந்த மண்ணிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர் துறவறம் பூண்டால் மக்களின் கதி..?
ஆனாலும் மன்னரை எதிர்க்க முடியாமல் அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து மன்னரின் முடிவை மக்களுக்கு அறிவித்துவிட்டு இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.
முடிசூட்டு விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மக்களிடம் மன்னர் பேசினார்,
'என் உயிரினிய மக்களே..! என்பால் என்ன அன்பு வைத்திருந்தீர்களோ அதை அன்பை என் மகன் மீதும் நீங்கள் வைக்க வேண்டும்.
நல்ல மரமானது கெட்ட கனி தராது என்பதால் என்னுடைய ஆட்சியிலும் மேலான நல்ஆட்சியை என் வாரிசான என் மகன் தருவான்.
நான் துறவறம் பூண்டு நமது அண்டை நாட்டு எல்லைக்குள் இருக்கும் முனிவரின் ஆசிரமம் சென்று என் வாழ்நாளை கழிக்கப் போகிறேன்.
என்னை தடுக்காமல் விடை கொடுங்கள்'
மக்கள் கண்ணீரோடு சம்மதம் தெரிவித்தார்கள்.
மன்னர் முனிவரை சந்தித்தார். சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த முனிவர் மன்னனிடம் சொன்னார்,
'மன்னா..! ஒரு மனிதனின் வாழ்வை விதி நிர்ணயிக்கிறது. அந்த விதியை முன் ஜென்மங்களில் அவன் செய்த பாவ புண்ணியங்கள் நிர்ணயம் செய்கின்றன.
அந்த வகையில் நீ மிகப் பெரிய புண்ணியவான். இந்த பிறவி முழுவதும் லெளகீக வாழ்க்கையில் அனைத்து சுகபோகங்களையும் நீ அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அது மாறாது.
அதனால் துறவறம் பூணும் எண்ணத்தை கைவிட்டு விட்டு மீண்டும் நாட்டிற்கு சென்று உன் மகனுக்கு உறுதுணையாக இருந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கு'
முனிவரின் கோரிக்கையை மன்னர் ஏற்கவில்லை. துறவறம் பூண்டு முனிவரின் சீடனாக வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்து ஒரு சிறிதும் மாறவில்லை. மீண்டும் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்தான்.
சிறிது நேரம் மௌனம் சாதித்த முனிவர் மன்னனிடம் பேசினார்,
'மன்னா..! என்னிடம் சீடனாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அதாவது நீயாக யாரிடமும் சென்று எதையும் கேட்கக் கூடாது. அது உணவாக இருந்தாலும் கூட.
அதே நேரத்தில் பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி.
இதற்கு சம்மதம் என்றால் வரும் பௌர்ணமி நாள் அன்று துறவறம் பூண்டு என்னிடம் வா'
மன்னன் மகிழ்ச்சி தாண்டவம் ஆடினான். தன்னுடைய நாட்டிற்கு திரும்பி அனைவரிடமும் தன்னை முனிவர் சீடராக ஏற்றுக்கொண்ட விஷயத்தை சொன்னான்.
முனிவர் சொன்ன பௌர்ணமி வந்தது. மன்னன் மரவுரி தரித்து அரண்மனையில் இருந்து வெளியே வந்தான்.
வாசலில் மன்னன் பயணம் செய்ய யானை ஒன்று தயாராக இருந்தது. அருகிலேயே ஒரு மாட்டு வண்டியில் மன்னருக்கு தேவையான உணவு பதார்த்தங்கள் இருந்தன. கூடவே அவருக்கு சேவை செய்ய பத்து வேலையாட்களும் இருந்தனர்.
துறவறம் பூண்டவனுக்கு இதெல்லாம் எதற்கு என அவன் கேள்வி கேட்க நினைத்த வேளையில் முனிவர் சொன்னது நினைவிற்கு வந்தது,
'பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி'
அதனால் அவைகளை பெற்றுக் கொண்டு முனிவரின் குடிலுக்கு வந்து சேர்ந்தான்.
தொடர்ந்து நாட்டில் இருந்து மன்னனுக்கு அறுசுவை உணவுகள் வந்து கொண்டே இருந்தன. வேலையாட்கள் அவனுக்கு சேவை செய்து கொண்டே இருந்தனர். முனிவரோடு எங்கு சென்றாலும் யானை மீது அமர்ந்தே பயணம் செய்தான்.
அதனால் முனிவரின் மற்ற சீடர்களுக்கு முனிவர் மீதும் மன்னன் மீதும் பொறாமையும் கோபமும் வந்தது. மதிய வேளையில் யாசகம் தேடி அண்டை நகருக்கு கடும் பாறைகள் மீது நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் சீடர்கள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்,
'நம்முடைய குருவும் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு பார்க்கத்தான் செய்கிறார். இந்த வேகாத வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நாம் துடிக்க துடிக்க நடந்து கொண்டிருக்கிறோம்.
மன்னர் யானை மீது அமர்ந்து அறுசுவை உணவை உண்டு கொண்டு சௌகரியமாக வருகிறார். கேட்டால் இதெல்லாம் விதி என நமது குரு மழுப்புகிறார்.
எங்கே ஆள் அரவமற்ற இந்த காட்டுப் பாதையில் யானையையும், அறுசுவை உணவையும், ஏவலாட்களையும் அனுப்பிவிட்டு நாம் யாசகம் கேட்டு திரும்பி வரும் வரை மன்னனை இந்த பாறையில் வெறும் காலோடு குரு நிற்கச் சொல்லட்டும்.
உண்மையிலேயே லௌகீக வாழ்க்கையை அவன் அனுபவிக்க வேண்டும் என்கின்ற விதி இருந்தால் அவனுக்கு எப்படி கடவுள் கருணை காட்டி இந்த கஷ்டத்திலிருந்து காப்பாற்றுகிறார் என பார்ப்போம்.
இந்த சவாலை நம் குருவிடம் சொன்னால் அவர் ஏற்க தயாராக இருக்கிறாரா?'
குருவிற்கு சீடர்களின் எண்ண ஓட்டங்கள் தெளிவாக புரிந்தது. மன்னனை யானையிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்.
'மன்னா..! உன் மகன் அனுப்பி வைத்த யானை, அறுசுவை உணவை சுமந்து வரும் வண்டி, உன்னுடைய வேலை ஆட்கள் அனைவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்பு.
நாங்கள் பக்கத்து நகருக்கு சென்று யாசகம் பெற்று வரும் வரை இந்த பாறையில் அசையாமல் நில்'
குருவின் உத்தரவை வேதவாக்காக ஏற்ற மன்னன் அனைத்தையும் அனுப்பிவிட்டு வெறும் காலோடு பாறையில் நின்றான்.
குரு தன் சிடர்களோடு அருகில் இருந்த வளைவு பாதையில் வலது பக்கம் திரும்பி மறைந்து போனார்.
இரவு வேளையில் யாசகம் பெறச் சென்றவர்கள் திரும்பினர்.
சீடர்களுல் ஒருவன் மற்றவனை பார்த்து சொன்னான்,
'வெயிலும் பசியும் தாங்க மாட்டாமல் மன்னன் மயங்கி கீழே விழுந்து இருப்பான். எல்லாம் விதி என தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் நம் குருவின் அலங்காரமும், பணக்காரன் ஏழை என பாகுபாடு பார்க்கும் அவரின் ஒரவஞ்சனை புத்தியும் அடியோடு அழிந்து விடும்'
சிரித்து பேசிக் கொண்டே மன்னன் நின்றிருந்த வளைவில் திரும்பியவர்களுக்கு பகீர் என்றிருந்தது.
மன்னன் வழக்கம்போல் யானையின் மேல் அமர்ந்து அறுசுவை உணவை உண்டு கொண்டிருந்தான். யானை பக்கத்தில் அவனுக்கு தேவையான அறுசுவை உணவுகளை தாங்கி வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. முன்பு போல் பத்து வேலையாட்கள் அவனுக்கு ஏவல் வேலை செய்யக் காத்துக் கொண்டிருந்தனர்.
சீடர்கள் கோரசாக கத்தினார்கள்,
'குருவே இவன் ஒரு மோசடி பேர்வழி. நீங்கள் உத்தரவிட்ட பிறகும் உங்கள் முன்பு யானையையும், அறுசுவை உணவு வண்டியையும், ஏவாள்களையும் அனுப்புவது போல் அனுப்பி விட்டு நம் தலை மறைந்ததும் அவைகளை எல்லாம் மீண்டும் வரச் சொல்லி சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
இவனை நீங்கள் ஆசிரமத்தில் இருந்து துரத்தி விடுவதோடு கடுமையான தண்டனையையும் வழங்குங்கள்'
குரு மனதிற்குள் சிரித்தபடி சீடர்களிடம் பேசினார்,
'சற்று பொறுங்கள்! என்ன நடந்தது என மன்னனிடமே கேட்போம்'
மன்னனை நோக்கி குரு கேட்டார்,
'மன்னா என்ன இது..! என் கண் முன்பாக நீ நாட்டிற்கு திருப்பி அனுப்பியவைகள் எல்லாம் மீண்டும் இருக்கின்றனவே. என் சொல்லிற்கு நீ மதிப்பளிக்கவில்லையா?'
மன்னன் பதறிப் போய் பதில் சொன்னான்,
'குருவே! உங்கள் உத்தரவை சிரமேற்கொண்டு நான் யானை, அறுசுவை உணவு வண்டி, வேலை ஆட்களை என் நாட்டிற்கு அனுப்பி விட்டேன்.
நீங்கள் சொன்னது போல் வெறும் காலுடன் சுடு பாறையில் நின்று கொண்டிருந்தேன்.
வளைவு பாதையில் நீங்கள் வலப்பக்கமாக திரும்பினீர்கள். அடுத்த நொடியில் அதே வளைவு பாதையில் இடப்பக்கத்தில் இருந்து வேட்டைக்கு சென்று இருந்த என் நேச நாட்டு அரச நண்பன் படை பரிவாரங்களுடன் வந்தான்.
என்னைப் பார்த்ததும்,
'நண்பா..! நீயா இந்த கோலத்தில் இருக்கிறாய்? உன்னை ஒரு பரதேசியாக பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அதனால் நான் அமர்ந்து வந்த யானை, எனக்காக கொண்டுவந்த அறுசுவை உணவு வண்டி, எனக்கு சேவை செய்ய அழைத்து வந்த வேலையாட்களை உனக்குத் தருகிறேன். பெற்றுக்கொள்' என்றான்.
'பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி' என நீங்கள் சொன்ன வார்த்தைகள் என் செவிக்குள் ஒலித்தன.
அதனால் மறுப்பேதும் சொல்லாமல் அவைகளை வாங்கிக் கொண்டேன். என் மீது எந்த தவறும் இல்லை குருவே'
மன்னரிடம் குரு பேசினார்,
'மன்னா நடந்தவைகள் எல்லாம் எனக்கு ஞானதிருஷ்டியில் தெரியும். என்னோடு வந்த சீடர்கள் உன்னையும், என்னையும் தவறாக பேசியதாலயே உன் வாய் வழியாக இந்த உண்மைகளை வாங்கினேன்.
நான் சொன்னது போல் இந்த பிறவியில் நீ லெளகீக சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி உன்னால் மட்டும் அல்ல; யாராலும் செயல்பட முடியாது.
அதனால் நடப்பவைகள் எல்லாம் இறைவனின் கட்டளைகள் என சிரமேற்கொண்டு உன் வாழ்வை இறைவனின் விருப்பப்படியே நகர்த்து.
துறவரத்தில் மட்டும்தான் இறைவனை காணலாம் என்பது தவறு. மக்களுக்கு நீ செய்யும் ஒவ்வொரு சேவையிலும் இறைவன் இருக்கிறான்.
அதனால் நீ நாட்டிற்குச் சென்று மீண்டும் அரச உடை தரித்து மக்களுக்கான சேவை செய். அதுதான் உன் விதி'
மன்னனுக்கு வாழ்க்கை புரிந்தது. குருவிற்கு நன்றி சொல்லி நாட்டிற்கு கிளம்பினான்.
குரு சீடர்களை பார்த்து கேட்டார்,
'என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மன்னன் கிளம்பி போய் விட்டான். என் மீது நம்பிக்கை வைக்காமல், இறைவனை நினைக்காமல், எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்கின்ற உண்மை புரியாமல் சதாகாலமும் பொறாமை எண்ணத்தோடு திரியும் நீங்கள் எப்போது என்னை விட்டு போகப் போகிறீர்கள்?'
சீடர்கள் தலை குனிந்து நின்றார்கள். குரு பேச்சை தொடர்ந்தார்,
'என்னை விட்டு நீங்கள் செல்லுங்கள் என நான் சொல்வது கூட ஒரு வகையில் ஆணவம் தான். அதனால் நான் தூய்மை அடைய வேண்டுமென்றால் தீமைகளை தோளில் தூக்கிக் கொண்டு திரியும் உங்களை விட்டு நான் தான் செல்ல வேண்டும்'
குரு அவர்களை விட்டு விலகிச் சென்று அவர்களின் கண் பார்வையில் இருந்து மறைந்தே போனார்.
சீடர்களில் ஒருவன் வேதனை பட்டுக்கொண்டே சொன்னான்,
'குரு அடிக்கடி சொல்வது போல் எல்லாம் விதி தான் என்றால் இதையும் நமது விதி என இனியாவது ஏற்றுக் கொள்வோம்.
குரு இருந்த பொழுது வராத ஞானம் குரு மறைந்த பிறகு நமக்கு வந்திருக்கிறது'

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·