
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.
கடிதப் போக்குவரத்து மூலம் இவரது நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.
"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.
1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார். அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.
தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார். அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்.
"இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார். வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள். இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.
அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.
எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.
உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த ஒரு பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.
பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார். "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.
கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார். ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.
வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார். பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.
உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார். அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின. முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார். "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி. இப்படித்தான் பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.
அன்று 1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், பின்1967-ல் எம்.ஜி.ஆர். நடித்த "படகோட்டி.'' படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அந்தப்பாடல் தான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva