- · 5 friends
-
I
ரசமலாய்
ரசமலாய் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் பாலை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து, அதில் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். பால் அடுப்பில் இருக்கும் போதே அதில் எலுமிச்சை சாற்றை கலந்தால், ரசமலாய் மிருதுவாக வராது.
பால் மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக கலந்த பின், பாலை மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அவ்வாறு காய்ச்சும் போது பால், தண்ணீர் தனித்தனியாக வந்துவிடும். அதன் பின் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பெரிய சல்லடைக்கொண்டு வடிகட்ட வேண்டும்.
சல்லடையில் தங்கிய பன்னீரில் இரு கப் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின் பன்னீரை நீரின்றி பிழிந்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு பிசைந்து காட்டன் துணியால் இறுகி கட்டி வைக்க வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
இதற்கிடையில் ராப்ரி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வரும் போது அதில் சிறிதளவு குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்க வேண்டும். அதன் பிறகு துருவிய பாதாம் மற்றும் பிஸ்தா துண்டுகளை பாலில் சேர்த்து 6 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி, ராப்ரியை நன்றாக ஆற விட வேண்டும்.
இப்போது துணியில் கட்டி வைத்த பன்னீரை பெரிய தட்டில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை சிறு சிறு துண்டுகளாக கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும்.
இதற்கிடையில் சர்க்கரை பாகை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் 350 கிராம் சர்க்கரை மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சர்க்கரை நன்றாக உருகியதும் அதில் நாம் கட்லெட் வடிவில் செய்து வைத்திருக்கும் பன்னீரை மெதுவாக போட்டு, மூடி வைத்து 15 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் பன்னீர் நன்றாக உப்பி இருக்கும். இந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, சர்க்கரை பாகில் இருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக எடுத்து, அதில் இருக்கும் சர்க்கரை தண்ணீரை பக்குவமாக அழுத்தி எடுக்க வேண்டும். அதன் பின் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் ராப்ரியில் போட்டு ஊற விட வேண்டும்.
சுமார் 1 முதல் 2 மணி நேரம் கழித்து சுவையான ரசமலாயை பரிமாறலாம். இதை பிரிஜ்ஜில் வைத்தும் குளுகுளுவென்று சாப்பிடலாம்.
பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
ராப்ரி செய்ய தேவையான பொருட்கள்:
பால் - 500 மில்லி லிட்டர்
சர்க்கரை - 7 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
துருவிய பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்
துருவிய பாதாம் பருப்பு - 2 ஸ்பூன்
சர்க்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 350 கிராம்
தண்ணீர் - 4 கப்