ஒரு முறை குடும்பத்தார் சுமார் 20 பேர்
பழனி சென்று, முருகரை தரிசிக்கும்போது, முருகர் ஆண்டிகோலத்தில் இருந்தார்.
எங்கள் உறவினர்கள் அனைவருக்கும்
சற்று வருத்தம்.
ஆண்டிகோலத்தை விட ராஜ அலங்காரத்தில் முருகரை தரிசித்திருக்கலாமே என்ற ஆதங்கத்தை அனைவரும் உரையாடி கொண்டு இருந்தார்கள்.
அப்போது மண்டபத்தில் எங்கள் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் சுமார் 60 வயது இருக்கும், பளிச்சென்று காவி வேட்டி, காவி துண்டை மார்பில் போர்த்திக் கொண்டு, நெற்றி நிறைய திருநீறுடன் நல்லதேஜஸோடு, நாங்கள் பேசி கொண்டு இருப்பதை கேட்டு கொண்டு இருந்தார்.
நான் ஒன்று சொல்லட்டுமா? என்று கேட்டார்.
சொல்லுங்கள் ஐயா என்று ஆவலோடு கேட்டோம்.
மனித பிறவியில் சுக துக்கங்களை அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்பு. நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை சொல்லலாம்.
நம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று பொதுவாக நினைக்கும் நாம், ராஜ அலங்காரத்தையே விரும்புவோம்.
அது இயல்பான மன ஈர்ப்பு.
ஆனால் ஆண்டிகோலம் ஞான கோலம். முற்றும் துறந்த கோலம்.
வாழ்வின் புற சுகங்களிலிருந்து
தன்னை விடுவித்து கொண்டு, பிறவியின் பயனாகிய இறைவனை நோக்கி பயணிக்க நம்மை உணர்த்தும் கோலம்.
தொடர்பிறவி அறுத்து, என்னோடு சங்கமமாகி முக்தி பெறுவாய் என்று அன்போடு நம்மை அழைக்கும் கோலம்.
தொடர்பிறவிகளிலேயே உழன்று
கொண்டு இருக்கும் நீங்கள், பிறவி
அறுத்து முக்கி அடைய ஆசிர்வதிக்கும் கோலம் ஆண்டிகோலம்.
எனவே ஆண்டிகோலத்தில் முருகரை தரிசிப்பதும் மிகவும் சிறப்பு." என்று முடித்தார்.