- · 5 friends
-
I

காணாமல் போன மகன் (குட்டிக்கதை)
மெல்ல நகர்ந்தது அந்த ரயில் வண்டி. மனைவியுடன் மகனும் சேர்ந்து குற்றாலத்திற்கு ரயில் பயணம்
"டேய் தம்பி! அம்மாவை பார்த்து பத்திரமா அழைச்சிட்டு போடா!.. அவ ரொம்ப தடுமாறுரா" என்று கத்தியபடி, ஓடிய ரயிலுடன், பிளாட்பாரத்தில் ஓடியபடியே, ஜன்னல் வழியே கண்களால் ஊடுருவி மகன் தினகரனை பார்த்து கட்டளையிட்டார் அப்பா ராமமூர்த்தி
அவரது வெள்ளை சட்டையில் புள்ளி வைத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தது மழைத்துளிகள்..
" ஏங்க!நீங்க மழையில நனையாதீங்க. உடம்புக்கு ஆகாது.. வீட்டுக்கு பத்திரமா போங்க" என்று அம்மா மணிமேகலை அப்பாவை பார்த்து போட்ட சத்தமோ அந்த ரயில் வண்டியின் சத்தத்தை விட ஓங்காரமாய் கேட்டது மகன் தினகரனுக்கு ..
மகனின் நினைவுகளை கலைவது போல்"டேய் தம்பி! உன்னை நான் ரொம்ப கஷ்டப் படுத்துறேன். மன்னிச்சிடுடா' என்று தழுதழுத்த குரலுடன் அம்மா விம்ம "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா! போற காரியம் நல்லபடியா முடியும். கவலைப்படாதீங்க "என்று ஆறுதலாக கூறியபடி அம்மாவிற்கு படுப்பதற்கு ரயிலில் வசதி செய்து கொடுத்தான் மகன் தினகரன்
இது வெறும் வாய் வார்த்தை தான் ..நடப்பதற்கு சாத்தியம் அல்ல என்பது அவனுக்கும் தெரியும். அவனது அந்தத் தாய்க்கும் தெரியும். ..இருந்தும் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று குற்றாலத்திற்கு அருகில் இருக்கும் அந்த மலைக் கோவிலுக்கு செல்வது இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது .
ஆனால் அந்தத் தாய் போவது அந்த கடவுளைத் தேடி அல்ல.. சிறுவயதில் அந்தக் கோவிலில் காணாமல் போன தன் சின்ன மகன் கணேசனை தேடியே தான்.. .. இதோ அவன் காணாமல் போய் 30 வருடங்கள் உருண்டோடி விட்டது
அந்த நாள். தினகரன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அசம்பாவிதம் நடந்தேறிய நாள். ..அது ஒரு மலைக்கோவில்.
பௌர்ணமி நிலவொவொளியில் ,தாயும் தந்தையும் கோவிலில் பாய் விரித்து ஒரு புறம் அமர்ந்திருக்க பிள்ளைகள் இருவரிடையே கண்ணாமூச்சி ஆட்டம்
"கண்ணாமூச்சி ரே… ரே…
காதறுப்பான் ரே… ரே…
நல்ல முட்டையைத் தின்னுப்புட்டு
கெட்ட முட்டையக் கொண்டு வா…!’
என்று கத்திக்கொண்டே ஆடிய ஆட்டத்தில், மூடிய கண்களை தினகரன் திறந்து தம்பி கணேசனை தேடிய பொழுது அவன் காணாமல் போனவன் காணாமல் போனவன் தான்.. இதோ 30 வருடங்களாக கண்ணாமூச்சி ஆட்டமாடி எல்லோரையும் தேட வைத்து கொண்டிருக்கிறான் கணேசன்
அதே மலைக்கோவில். இன்றும் சித்ரா பௌர்ணமி.. அம்மா ஒவ்வொருரிடமாக மகனின் சிறு வயது புகைப்படத்தை காட்டி கோவிலில் வருவோர் போவோரிடையே மகனை தேடிக் கொண்டிருக்கிறார்..
கோவில் தூண்களில் சாய்ந்தபடி சற்றே கண் அயர்ந்தான் மகன் தினகரன். அவன் கண்விழித்த போது அங்கே அம்மாவை காணவில்லை.. ..அவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறாரோ.. "
"கண்ணாமூச்சி ரே ரே
காதறுப்பான் ரே ரே" "என்று இன்று அம்மாவும் கத்துவது போல் கற்பனையாக காதில் எதிரொலிக்க ஒரு நிமிடம் அவனது உடல் ஆட்டம் கண்டது ..
"அம்மா! அம்மா! என்று அவன் அலறும் சத்தம் மீண்டும் மீண்டும் எதிரொலியாக அவன் காதுகளுக்கு எட்டியதே தவிர,அது தாயின் காதுகளுக்கு ஏனோ கேட்கவில்லை..
தரையில் கேட்பாரற்று கிடந்த அம்மா வைத்திருந்த கைப்பேசி இதோ அனாதையாய் கிடக்க அதில் அப்பாவின் அழைப்பு மணி சத்தம் ...அப்பாவின் உணர்வுகள் கூட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் அம்மாவை தேடுகிறதோ?
அம்மாவை தேட ஆயத்தமான மகன் தினகரனின் கையில் இப்பொழுது அம்மாவின் புகைப்படம் .. அங்கு வருவோர் போவோரிடம் காட்டி அவன் அம்மாவை தேட அதில் , அதில் ஒருவர் அம்மாவை
ஒரு பெரியவரோட அந்த மலைக்கு மேலே ஏறியதை பார்த்ததாக சொல்லவே , குழம்பினான் தினகரன்
அம்மாவால் மலையேற முடியுமா? அவரது தேய்ந்த முட்டிகள் அதற்கு ஒத்துழைக்குமா? இருப்பினும் அவர் சொன்ன திசையில் மகன் தேடி செல்ல , அங்கே மலையின் உச்சியில் ஒரே சலசலப்பு ..
தொலைந்த மகனை தேடி தேடியே வாழ்க்கையை தொலைத்த அம்மா ஏதேனும் விபரீத முடிவுக்கு வந்து விட்டார்களோ ?இதயம் துடிதுடிக்க"அம்மா !அம்மா !"என கத்திக் கொண்டே முன்னேறினான் தினகரன்.. அங்கே மயங்கிய நிலையில்தரையில் கிடந்தாள் அம்மா.. அவளை சுற்றி ஓர் மலைவாழ் குடும்பத்தினர்.
அம்மாவிற்கு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார் அந்தக் குடும்பத்தில் ஒருவரான மருத்துவர்..
"யாரோ ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு மனிதனை நம்பி மலையேறி வந்துட்டாங்க உங்க அம்மா "என்றான் கூட்டத்தில் வேடிக்கை பார்த்த ஒருவன்.. அதற்கு அந்த மருத்துவர் தினகரனை பார்த்து"
"அவர் வேறு யாரும் இல்லைங்க .. எங்க அப்பா தான் .. இப்படி தான் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் யாரையாவது மலைக்கு மேல் கூட்டிட்டு வந்து தள்ளிவிட போறேன்னு பயமுறுத்துவாரு.. பல வருடங்களுக்கு முன் சித்ரா பௌர்ணமி அன்று என் அப்பாவின் வாழ்வில் நடந்த ஒரு அசம்பாவிதம் அவரை மனநோயாளி ஆக்கிவிட்டது்..அன்று ஒரு நாள் மட்டும் அவரிடம் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதே எங்கள் வேலை ஆகிவிட்டது ..இதுவரை எந்த இழப்பும் இல்லை .அந்த வரிசையில் உங்க அம்மாவையும் இன்று காப்பாத்திட்டோம்” என நிம்மதி பெருமூச்சு விட்டார் அந்த மருத்துவர்.
தினகரன் அந்த குடும்பத்தினரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தன் தாயை காப்பாற்றியதற்காக நன்றி கூறினான் தினகரன்.
அரண்டு போயிருந்த அம்மாவின் அருகில் ஆறுதலாய் சென்று அவரை அரவணைத்து கொண்டான்.
அம்மாவோ தினகரனை கண்டதும் "வாடா தம்பி நம்ம ஊருக்கு போய்டலாம் .. இனி இந்த ஊரும் கோயிலும் நமக்கு வேண்டாம்.. வீட்டுக்கு போகணும்"என மீண்டும் மீண்டும் சிறு பிள்ளை போல் அழுதபடி சொல்லிக் கொண்டே இருந்தாள்.. அம்மாவின் கண்களில் மரண பயம் தெரிந்தது. மலையின் உச்சியில் மரணத்தின் உச்சிக்கே சென்று வந்தவள் ஆயிற்றே .. அம்மாவும் அந்த மலைவாழ் குடும்பத்தினருக்கு நன்றி கூற அங்கிருந்து விடை பெற்றனர் இருவரும்..
மீண்டும் ரயில் பயணம் . சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அம்மாவின் முகத்தில் பயம் இன்னும் தெளியவில்லை..
கலங்கிய முகத்துடன் மெல்ல பேச ஆரம்பித்தாள் அந்த தாய்
“டேய் தினகரா! இனி நாம் மலைக்கோவிலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை ..
உன் கூட பிறந்த சகோதரனை உன்னாலேயே அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததென்றால், அவனை பெற்ற எனக்கு அடையாளம் தெரியாதா?
ஆம்..மலைவாழ் குடும்பத்தினரிடையே ஒரு மருத்துவராக என் அன்பு மகனை கண்டு விட்டேன்.. மயங்கி கிடந்த நிலையில் என்னை அவன் தொட்ட பொழுது ஒரு தாயின் உணர்வு மகனைக் காட்டிக் கொடுத்தது.
ஆனால், அவன் வசிக்கும் அந்த அழகிய குருவி கூட்டை நான் கலைக்க விரும்பவில்லை... அவனுக்கென்று அங்கே ஒரு குடும்பம் .. தாய், தந்தை மனைவி பிள்ளைகள் அண்ணன் தங்கை என அவர்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவனைக் காப்பாற்றி வாழ்வளித்து மருத்துவர் ஆக்கிய அந்த வளர்ப்பு தாயிடம் இருந்து பிள்ளையை பிரித்தெடுக்கும் அளவிற்கு பாவி அல்ல நான்.. அவன் நன்றாக இருக்கிறான் என்ற நிம்மதியே போதும் எனக்கு.முடிந்தது என் பிள்ளை தேடும் படலம். இனி நாம் அந்த ஊருக்கு செல்ல வேண்டாம்..
இந்த விஷயத்தை உன் அப்பாவிடம் சொல்லி வயதான காலத்தில் அவரது நிம்மதியை கெடுக்க வேண்டாம்.. தொலைந்த மகன் தொலைந்ததாகவே இருக்கட்டும்"அம்மா பேசிக்கொண்டே இருந்தார் .. அவளது தெளிவான பேச்சு தினகரனை வியக்க வைத்தது...

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·