- · 5 friends
-
I

மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி (குட்டிக்கதை)
விதியை தர்மபத்தினியாலும் வெல்ல முடியாது!
மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள், தற்செயலாக திரும்பினாள்.
முனிவர் தன்ரீகர் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க… அவரது நிழல் மட்டும் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்தாள். தன் கணவருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்து கலவரப்பட்டாள்.
இதை தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் எழுந்து அகல் விளக்கை நன்கு தூண்டி எரிய விட்டாள்.
குளித்து விட்டு சாணத்தைக் கரைத்துத் தெளித்தாள். கோலம் போட்டாள்.
கண் விழித்ததும் மகரிஷி தன்ரீகர் ஆற்றங்கரைக்கு நீராடக் கிளம்பினார். வாசலைத் தாண்ட முற்பட்ட போது, அவர் முன் வந்து நின்ற பூந்ததி, ‘‘ஸ்வாமி! இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன்.
சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்!’’என்றாள் கண்ணீருடன்.
‘‘நீ விரதம் இருப்பதற்கும் நான் வெளியே செல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்டார் தன்ரீகர்.
‘‘ஸ்வாமி… விளக்கம் கேட்காதீர்கள்! இன்று மாலை வரை குடிலை விட்டு வெளியே வராதீர்கள்.’’
கண்ணீரும் கம்பலையுமாக அவள் பேசிய விதம் மகரிஷி யின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்று, யோசனையுடன் அமர்ந்தவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டார்.
உடனே, ‘பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டாள்’ என்பது புரிந்தது.
புன் முறுவலுடன் வேடிக்கை பார்க்கத் தீர்மானித்தார். ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் ஏமாற்றமடைந்து குடிலை நோக்கி வந்தனர்.
குடிலை நெருங்கப் போனவர்களை அக்னிப்பிழம்பு எரித்தது. ‘‘மகா பத்தினி பூந்ததி தன் கற்பின் மீது சத்தியம் செய்து என்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள்.
எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது!’’ என்று அக்னி பகவான் எச்சரித்தார்.
மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் விஷயத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே தீவிரமாக பூஜை செய்து கொண்டிருந்தாள் பூந்ததி.
பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் கரைந்து கொண்டே இருந்தது.
நேரம் செல்லச் செல்ல அந்தக்காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது.
பூஜை தடைபடக் கூடாது என்று கருதி, பூந்ததி கண்களை மூடிய வண்ணம் மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்தியது. நிசப்தம் நிலவியதும் கண்களை திறந்தாள் பூந்ததி. இறைவனுக்குப் படைக்க இருந்த பிரசாதத்தை காகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்டு கோபமான பூந்ததி, அங்கிருந்த மரக் கிளையை ஒடித்து காகத்தை விரட்டினாள்.
காகம் தள்ளிப் போனது. பூந்ததி சற்று நகர்ந்து விரட்டினாள். மீண்டும் தள்ளிப் போனது. இப்படியாக காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள்.
இதுவரை விலகிப் போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது. ‘‘தாயே… மன்னியுங்கள்! குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது. விதிப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன்.
‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, கிணற்றில் குதித்தாள் பூந்ததி. எமதர்மன் பின் தொடர்ந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்தான்.
‘பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே?’ என்று அவன் யோசித்தபோது… கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி.
‘‘தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப் போகிறேனோ… அங்கெல்லாம் காகம் உருவில் சென்று எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்!’’ என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன்.அதன்படி காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டும் இருந்து வருகிறாள் பூந்ததி.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·