
கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்
முன்னணி நடிகையாக நிறைய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் கௌதமி. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
அதன் பிறகு கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர் இப்போது தன் மகளுடன் தனியே வசித்து வருகிறார். கௌதமி தற்போது காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னுடைய 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
கௌதமிக்கு தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் ஏராளமான சொத்துக்கள் இருந்திருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அழகப்பனிடம் அதை விற்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
ஆனால் அழகப்பன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்களை தயார் செய்து கௌதமியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கௌதமி தற்போது பறிகொடுத்திருக்கிறார்.
இதை வங்கி பரிவர்த்தனையின் மூலம் கண்டுபிடித்ததாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அழகப்பனிடம் கேட்டபோது அரசியல் பின்புலத்தை காட்டி மிரட்டுவதாகவும், தன்னுடைய மகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த கௌதமி தற்போது தன்னுடைய சொத்துக்களை மீட்டுக் கொடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவருடைய இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.























