கண்ணே,
அன்பு பூத்திட
அகலினில் நெய் விட்டு...
பாசம் விரிந்திட
பஞ்சு திரி இட்டு...
விளக்கினில் படர்ந்து
வெளிச்சம் மலர்ந்து...
உள்ளத்தில் இருளாய்
உறைந்திருக்கும் இன்னல்கள்
அகன்று வெளியேறுவதாய்...
அழகான தீப ஒளிதனில்
மனம் பிரகாசமாய்
மகிழ்ச்சி பெருகட்டும்!
விழா காலமிது
வரவேற்கும் குதூகலத்தில்...
வானமிறங்கி வந்து
வாழ்த்து சொல்வதில்
வண்ணக்கிளி ஒன்றிணைந்ததோ
வசீகரிக்கும் அழகினில்....!
கிடைத்தது
ஒரு நாள் தொலைந்து
போகலாம்.
பிடித்தது
ஒரு நாள் வெறுத்தும்
போகலாம்.
நிரந்தரம்
என்று ஏதுமில்லை
இவ்வுலகில்.
வெறுப்பை
விதைத்த இடத்தில் அன்பை
அறுவடை
செய்ய நினைப்பது முட்டாள் தனம்.
எந்த
உறவாயினும் சற்று கவனமாகவே
இருங்கள்.
எதிர்பார்த்த தேவைகள் கிடைக்காத
நேரத்தில்
தூக்கி எறியப்படலாம்..
உண்மையான
அன்பில் சட்டென விலகுதல்
என்பது
அத்தனை சுலபமல்ல.
நடிப்பவர்களுக்கு மட்டுமே
அது சுலபமானதாகும்.
ஆகாய கருவினிலிருந்து
அற்புதமாய் விழுந்தது
பூமழை குழந்தையது
பூமித்தாய் பொன்மடியில்...
ஓடையாய் மழலை கொஞ்சி
ஒய்யாரமாய் தவழ்ந்தோடி...
அருவியாய் இடறி விழுந்து
ஆர்ப்பரித்து எழுந்து..
அன்னநடை பயின்று
ஆறென உருமாறி...
பெருகிய வேகமதில்
பெருநதி என்றாகி...
பேருவகை கொண்டு
கடல் சேர்ந்திடும் தண்ணீரை...
கலங்காது காத்திடுவாள்
நிறைவாக தாங்கிடலாய்...
நிலமென்னும் அன்னை!
மன்னிப்பை அளித்துப் பாருங்கள்.....
மனபாரம் குறையும்...
மன்னிப்பை கேட்டுப் பாருங்கள்....
பகையெல்லாம் மறையும்...
மன்னிப்பை அளந்து பாருங்கள்...
மனசு பூவாக மாறும்...
மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....
வசந்தம் தாலாட்டி போகும்...
மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....
குதூகலம் வந்து சேரும்...
மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....
மனசெல்லாம் லேசா தோணும்...
மன்னிக்க முயன்று பாருங்கள்....
முயற்சியெல்லாம் வெற்றி தரும்...
மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....
எதிரில் புன்னகை தவழும்...
மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....
எதிரில் கண்ணீர் வழிந்திடும்...
மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....
முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...
மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....
வந்த நோயும் கடந்து போகும்...
மன்னிப்புடன் இணைந்துப் பாருங்கள்....
இதயங்கள் களிப்படையும்....
இனிமையான தருணம்
இந்திய விண்கலம்
விக்ரம் பதிவுதனில்
வெற்றி பாதையில்...
சந்திரயான்-3 அது
சந்திரனை தொட்டது...!
நிலவின் ஒளியில்
நிறைந்த பரவசம்...
பேருவகை எதிரொலியில்
பெருமையாய் பாரதம்!