- · 5 friends
-
I
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது. ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.
அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள்.
இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது. அவர் தவறியதால் போன வருடம் இல்லை.
இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது. ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி.
வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
பெண் படு சுறுசுறுப்பு. கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாமி. கல்யாணம் ஆன பின், முதல் வருட கொலுவுக்கு அவர் வாங்கி வந்தது. கொள்ளை அழகில் அம்பாள் ஜொலிக்க அதையே பார்த்துக் கொண்டு தன்னையே மெய்மறந்து நிற்பார் காமாக்ஷி மாமி.
மாமிக்கு நல்ல மனசு. ஒவ்வொரு வருட கொலுவுக்கும் ஏழைகளுக்கு புடவையும் பணமும் கொடுத்து அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து மனம் குளிர்வார்.
இந்த வருடமும் அஞ்சலைக்கும் அவள் பெண்ணிற்கும் வாங்கியாகி விட்டது. புடவைகள் வாங்கும் போது அரக்கு கலரில் பச்சை நிற பார்டரில் இருந்த பட்டுப் புடவையைக் கண்டதும் இதை வாங்கி யாருக்காவது வைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட அதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் காமாக்ஷி மாமி.
நான் கொலு வைக்கலாமா? நான் தாம்பூலம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? மனம் குழம்பி தவித்தது மாமிக்கு. கொலுவுக்கு அஞ்சலையின் பெண் மூலம் தெரிந்தவர்கள் அனைவரையும் வரச் சொல்லி அழைத்தார். மேலும் போனிலும் பேசி அழைப்பு விடுத்தார்.
குளித்து மடியாக செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டலை அழகாக சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைத்தாகி விட்டது. வருபவர்களுக்கு கொடுக்க வெற்றிலை பாக்கு, குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, வளையல்கள் என்று தாம்பாளத்தில் அடுக்கி வைத்து காத்திருந்தார்.
முன் மாதிரி இல்லாமல் இரண்டு, மூன்று பேர் மட்டும் வந்தது சற்று வேதனையை கொடுத்தாலும் அதை புறம் தள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். தாம்பூலத்தை அஞ்சலையின் பெண்ணையே கொடுக்கச் செய்தார். அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு வீடியோ எடுத்து அனுப்பினார்.
"ஏம்மா இந்த வயசுல பாடுபடறே, பேசாம இங்கே வந்துடேன்" என்று ஆசையாக மகன் அழைக்க "எனக்கு அங்கே ரொம்ப நாள் இருக்க பிடிக்கல. இங்கே தான் மனசுக்கு நிறைவாய் இருக்கு" என்று மறுத்தார்.
இன்று வெள்ளிக் கிழமை. சுவாமிக்கு சுண்டலோடு வடையும், சர்க்கரைப் பொங்கல் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு தலைக்கு குளித்து வடைக்கு ஊறப் போட்டு, சுண்டலும் சர்க்கரைப் பொங்கலையும் செய்யத் தொடங்கினார். ஒரு வழியாக பொங்கலும் வடையும் செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது. ஆனால், ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
மதிய நேரத்தில் தூறலாக பெய்த மழை மாலையில் கன மழையாக மாறி சக்கை போடு போட்டது. "இனி எப்படி வருவார்கள்? அம்மா இதென்ன சோதனை? செய்து வைத்த பிரசாதங்கள் எல்லாம் வீண்தானோ?" காமாக்ஷி மாமி தனக்குள்ளே புலம்பினார். சாப்பிடவும் பிடிக்கவில்லை.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து அஞ்சலையின் பெண்ணுக்கு சாப்பாடு போட்டு படுக்கச் சொன்னபோது யாரோ "மாமி, மாமி" என்று கூப்பிட்டு வாசல் கதவை தட்டும் ஒலி கேட்டது, கதவை திறந்தால், அங்கே வயதான மாமி நிற்பதைக் கண்டு "யாரு நீங்க!" என்றார்.
"கொலுவுக்கு வந்திருக்கேன். உள்ளே வாங்கோன்னு கூப்பிடாம, வெளியிலே நிறுத்தி யாருன்னா கேட்பா?"
"உள்ளே வாங்கோ. உங்களை இது வரைக்கும் பார்த்தது இல்லை. அதான் அப்படி கேட்டுட்டேன், தப்புதான்."
"நான் அடுத்த தெரு மாலினியின் அம்மா. காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருக்கேன். மாலினிக்கு கொலுவுக்கு வர முடியாத சந்தர்ப்பம். மாமி ஆசையா கூப்பிட்டிருக்கா. நீ போய்ட்டு வந்துடேன்னு என்னை அனுப்பினா. மழையும் இப்ப நின்னிருக்கா அதான் வந்தேன்" என்று வந்த மாமி புன்னகையுடன் கூறினார்.
பெரிய குங்கும பொட்டும், தலையில் பூவும் சூட, காதுகளில் வைரத் தோடும்,. காசு மாலையும், மந்தஹாச புன்னகையுமாக எதிரில் நிற்கும் மாமியை நமஸ்கரித்து எழுந்தார் காமாக்ஷி மாமி.
பாட்டு பாடி கிளம்பும் சமயம் " எனக்கு கொடுக்க என்ன வெச்சுருக்கே" என்று வந்த மாமி கேட்டதும் பீரோவில் இருந்த அரக்கு கலர் பட்டுப் புடவையையும், ரவிக்கை துணியையும் தாம்பூலத்தில் வைத்து அஞ்சலையின் பெண்ணைக் கொண்டு கொடுக்கச் சொன்னார் காமாக்ஷி மாமி.
"ஏன் நீ கொடுத்தா வாங்கிக் கொள்ள மாட்டேனா? நீயே கொடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார். "சரி, சரி, இந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்.உனக்கும் சந்தோஷமாக இருக்கும்" என்று சொல்லி பக்கத்து அறைக்கு சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் மாமியை "மடிஸாரில் மாமி எத்தனை தேஜஸ்" என்று வியந்து நோக்கினார் காமாக்ஷி மாமி.
"எனக்கு பசிக்குது, என்ன செஞ்சிருக்கே? கொண்டு வா சாப்பிடலாம்" என்று மாமி கேட்டவுடன் வடையையும், சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் கொண்டு வந்து கொடுத்தார் காமாக்ஷி மாமி.
சாப்பிட்டு விட்டு முடிந்ததும் "சரி நான் கிளம்பறேன். பொண்ணு தேடுவா, உன் ஆத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி கிளம்பி போன மாமியை நினைத்து மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது காமாக்ஷி மாமிக்கு. நிம்மதியாக கண்ணயர்ந்து தூங்கினார்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாலினிக்கு போன் செய்து "நீ நல்லா இருப்பேடி குழந்தே. உன்னால வர முடியாவிட்டாலும் உன் அம்மாவை அனுப்பி எனக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாய். அம்மா கிட்டே போனை கொடு" என்று காமாக்ஷி மாமி கூற, "அம்மாவா? என்னோட அம்மா இறந்து பத்து வருஷமாறது. நீங்க யாரையோ நினைச்சு இங்கே போன் செய்யறேள்" என்று சொல்லி மாலினி போனை வைக்கவும் குழம்பி தலையை சுற்றுவது போல் இருந்தது காமாக்ஷி மாமிக்கு.
"அப்ப இங்கே வந்தது யார்? கொட்டும் மழையிலும் வந்து என்னை பரவசப்படுத்தியது யார்?" விடை தெரியாமல் கொலுவை நோக்க அங்கே அம்பாள் சிலை மந்தகாஸப் புன்னகையுடன். குளித்து தெளித்து பூக்கூடையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள் காமாக்ஷி மாமி. அன்று கோவிலில் கூட்டம் லைனில் நின்று, கால்வலி வேறு. அம்மன் சன்னிதி வந்ததும் காமாட்சி மாமியின் முகத்தில் அதிர்ச்சி. அப்படியே சரிந்து விழுந்து விட்டாள் மயக்கமடைந்து. அருகிலுள்ளவர்கள் மாமியைத் தூக்கி வெளி மண்டபத் தூணில் சாய்த்து தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் எழுந்து மறுபடியும் அம்மன் சந்நிதியில், அதே புடவை, நேற்றிரவு யாரோ ஒரு மாமிக்கு தான் வைத்துக் கொடுத்த புடவையில் அம்மன் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தன் ஆத்துக்கு நேற்று இரவு வந்தது அம்பாள் தான் என்று புரிந்தது. இப்படித்தான் உண்மையான பக்தி கொண்டுள்ள பலருக்கு யாரோ போல் காட்சி கொடுப்பா காமாக்ஷி.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·