- · 5 friends
-
I
கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான உரையாடல் -- சிறுகதை
அவள் எங்கே இருக்கிறாள்?
மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.
பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்து இருக்கைக்காரி பச்சைப்புடவைக்காரியாக மாறியிருந்தாள்.
''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''
''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''
''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''
''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''
''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''
''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''
''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''
இடம் மும்பை. ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.
''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''
''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''
''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''
திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.
மறுநாள் அதிகாலை. அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது. இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!
அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!
கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.
''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.'' அவர் கண்களில் நீர்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.
''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.
'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.
''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''
''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள்.
'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள். யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''
''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''
விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.
-வரலொட்டி ரெங்கசாமி
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·