- · 5 friends
-
I
தேங்காய் கணக்கு ..... (குட்டிக்கதை)
மாலை ஆறுமணிக்குள் வேலை முடிந்துவிட்டதால் ஆறரை மணிக்கு வைண்டிங் வேலைகளை செய்யும் மேஜை, டூல்ஸ்களை எடுத்து உள்ளே வைத்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.
தெருவின் முனை தாண்டவில்லை செல்போன் அழைத்தது.
வாகனத்தை ஒரமாக நிறுத்தி எடுத்தேன் மனைவி அழைத்திருந்தார்.
எங்க இருக்கீங்க.
கடைய இப்பதான் பூட்னேன் தெரு மொனையில் நிக்குறேன்.
சரிங்க தேங்கா இல்லை வரும்போது வாங்கிட்டு வந்துருங்க.
சரி.
கீழவாசல் மார்கெட்டுக்கு எதிர்ப்புறம் நாட்டு மருந்து கடைக்கும் பெட்டிக்கடைக்கும் நடுவில் தெரு ஓரத்தில் எழுபது வயது மதிக்கத்தக்கவர் தேங்காய் கடை வைத்திருந்தார்.
வழக்கமாக அவரிடம் தான் தேங்காய் வாங்குவேன் ஒன்னரை வருடங்களுக்கு மேலாக வாங்குகிறேன்.
இன்று அவர் கடை போடவில்லை . அவர் சாக்கை விரித்து கடைபோடுமிடம் காலியாக இருந்தது.
பெட்டி கடையில் விசாரித்தபோது உடல் நலமில்லாமல் மெடிக்கல்காலேஜில் சேர்த்திருப்பதாகவும் பிரசர் அதிகமாகி சுயநினைவின்றி மயங்கி விட்டார்.
நாட்டு மருந்து கடைக்காரார் பார்த்துவிட்டு ஆம்புலன்சிற்கு போன் செய்து வந்ததும் ஏற்றி அனுப்பிவிட்டோம் என்றார்.
இது எப்போ நடந்தது என்றேன்.
முந்தா காலைல ஒம்போதரை இருக்கும்.
சரி இப்ப போனா அவர அங்க பாக்கலாமா? அவரு பேரு என்ன?.
பாக்கலாம் அவங்க பேரு வசந்தி. அவங்களுக்குன்னு யாரும் இல்லை பார்த்துக் கொள்வதற்கு என்றார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தது நிழலாடியது.
கீழவாசல் மார்க்கெட் அருகில் தேங்காய் கடை இருப்பதை பார்த்து விட்டு அவரிடம் முற்றல் இல்லாத நல்லதேங்காயா ரெண்டு குடுங்க எனக்கு தேங்கா வாங்க தெரியாது ஆத்தா என்றேன்.
அந்தப் பெண்மணி இரண்டு காய்களை எடுத்து கொடுத்தார்.
எவ்வளவு ஆத்தா காசு கொடுக்கனும்.
ரெண்டு காய்க்கும் நாப்பது ரூபா கொடுப்பா.
நாப்பது போதுமா ஆத்தா? காய் கொஞ்சம் பெரிசா இருக்கே.
அவர் கண்கள் கலங்கி குரல் தடுமாறியது.
இன்னொரு சிறிய காயையையும் எடுத்து சேர்த்து கொடுத்தார்.
எதுக்கு ஆத்தா இது. இதுக்கு எவ்ளோ தரனும்.
காசு கம்மியா இருக்கே கூட தரனும்மான்னு யாருமே கேட்டதில்ல. நீ கேட்டபாரு. ஒனக்கு ஒன்னு சும்மா தான் தாரேன். ஒன்னும் சொல்லாம எடுத்துக்கோ.
இல்லாத்தா அது முடியாது, அதுக்கும் காசு வாங்குனா ரெண்டு தேங்காயயும் எடுத்துக்குவேன். இல்லேன்னா எதுவும் வேணாம் என்றேன் உறுதியான குரலில்.
இந்த காசால நா பட்டபாடு என்னோட போகட்டும். தங்கமே எடுத்துக்கோடி நீ எம் புள்ள மாறி. இது எல்லாமே ஒனக்கு தான். எனக்கு உன்னோட அன்பு மனசு போதும் .
அழ ஆரம்பித்து விட்டார். சமாதான ப்படுத்திவிட்டு மூனு காய்க்கும் அம்பது ரூபா குடுப்பேன் வாங்கிக்கனும் அன்பு எல்லாம் அப்புறம்.
கண்களை துடைத்தபடி
சரி நீ எவ்வளவு குடுத்தாலும் வாங்கிக்கிறேன் என்றார்.
தேங்காயும் நல்ல தரமாகயிருந்தது..
அன்று ஆரம்பித்து அம்மாவும் பிள்ளையாகவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிவிட்டு தோங்காய்களை பணம் கொடுத்தே வாங்கி வருவேன் .
எனது அம்மாவிடமும் மனைவியிடமும் அவரை பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் ஒரு முறை பார்க்க வேண்டுமெனவும் சொல்லியிருந்தாள். அவரை பற்றி கேட்ட போதெல்லாம் பேச்சை மாற்றிவிடுவார் சொல்லவே மாட்டார். அக்கம் பக்கம் விசாரித்த போதும் யாருக்கும் அவர் யாரு? எங்கிருந்து வருகிறார் என்பதோ தெரியவில்லை.
வற்புறுத்தி கேட்டால் மெளனமாகி விடுவார். இரண்டு நாட்களுக்கு பேசவே மாட்டார். அவருக்கு உடல் உபாதைகள் இருக்கு என்பதை கூட என்னிடம் சொன்னதில்லை ஏதாவது உதவி வேண்டுமா என்றால் ஒன் அன்பே போதும் என்பார்.
மெடிக்கல்காலேஜ் அவசரப் பிரிவிலும் பொதுவார்டிலும் அவர் பெயரை விசாரித்து தேடியதில் ஐசியூ வார்டில் இருந்தார். உடனே பார்க்கவிடவில்லை .
நண்பர்கள் மூலம் சில சலுகைகள் பெற்று உள்ளே சென்று அங்கிருந்த செவிலியிடம் விசாரித்தேன்.
போய் பாருங்க நீங்க அந்த அம்மாக்குகு என்ன வேணும்.
அவரோட கடையில் தேங்கா அடிக்கடி வாங்குவேன் அந்த பழக்கம்.
ஒரு மாதிரியாக பார்த்தார்.
சலைன் பாட்டில் ஏற கண் விழித்தபடி படுத்திருந்தார்.
அவர் அருகில் அமர்ந்து கைகளை பிடித்து,
எப்படியிருக்கிங்க ஆத்தா
தடுமாறிய அவர் மலங்க விழித்து யாரு என்பது போல பார்த்தார்
எப்படியிருக்கீங்க ஆத்தா என்ன பண்ணுது சொல்லுங்க என்றேன்.
நீ யாரு தெரியலயே என்றார் மிக மெலிதான பலவீனமான குரலில்.
அதற்குள் செவிலி வந்து விட்டார்
அவருக்கு பிரசர் அதிகமாகி மூளையில் ரத்தம் க்ளாட் ஆகி மயக்கம் போட்டதில் ஞாபகமறதி வந்திருக்கலாம். நாங்களும் கேட்டோம் முழிச்சாங்க .ஆம்புலன்ஸ் டிரைவர்ட்ட யாரோ சொன்னத வச்சித்தான் அவங்களோட பேர போட்டிருக்கோம்.
இன்னிக்குள்ள கோமாவுக்கும் இல்லேன்னா உயிரும் போயிடலாம். என்றார்.
சரிங்க எனக்கொரு உதவி செய்ங்க . இங்க உறவும் இருக்க முடியாது. அவருக்குன்னு யாரும் இல்லேன்னாலும் என்னால முடிஞ்ச உதவி செய்ய நினைக்கிறேன்.. பொழச்சாலும் சரி போய்ட்டாலும் சரி எனக்கு தகவல் தெரிவிக்க முடியுமா?
சரி வாங்க அவங்க மெடிக்கல் பேப்பர்ல ஒங்க பேரும் செல் நம்பரும் எழுதிடுறேன்
கண்கள் கலங்கியபடி மன நிறைவோடும் என் மனைவிக்கு போன் செய்தேன்.
ஒரு பதினஞ்சு ரூவா காசாக சாமிக்கிட்ட முடிஞ்சி வை.
ஏன்.. என்னாச்சு..
பதறினாள்.
சொன்னேன்.
அதென்ன பதினஞ்சு ரூவா கணக்கு?
அது ஒரு தேங்கா கணக்கு.***
கதையாசிரியர்: வி.கலியபெருமாள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·