திருமுருக வாரியார் அவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர். தன் 3வது அகவையில் இருந்தே தன் தந்தையிடம் இலக்கண, இலக்கியங்களை கற்றுக் கொண்டவர். 8வது வயதிலைலயே பாடும் ஆற்றல் பெற்றவர். அதே வயதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களை நினைவிருத்தியவர். 18வது வயதில் இவர் ஆற்றிய முதல் சொற்பொழிவே இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது. சிறந்த நினைவாற்றல் கொண்டவர். சிவானியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
அனைவரும் விரும்பும் படி சுவைச்சாரமாய் சொற்பொழிவுகளில் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் கொண்டவர். தமிழர் பண்பாட்டையொட்டி பெண்மையைப் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.
வீணைப் பயிற்சி பெற்றவர். இசைச் சொற்பொழிவின்போது அவற்றை இசையோடு பாடுபவர்.
150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக ‘தாத்தா சொன்ன குட்டிக் கதைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாக, எளிய நடையில், இலக்கியத்தரம் உடையனவாக இருக்கும்.
துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தவர். 1967-ஆம் ஆண்டில் சென்னை தமிழிசை மன்றம் இவருக்கு ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது. செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் சோதி என்றெல்லாம் போற்றப்பட்டவர்
"தமிழ் வளர்த்த தமிழ்ச் சான்றோர் புகழ் போற்றுவோம்.
உலகம் போற்றும் தமிழ் மொழி புகழ் ஓங்கச் செய்வோம்"