நேபாளத்தில் தொடரும் அரசியல் குழப்பம்
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவிய சில நாட்களுக்குப் பிறகு, கே.பி.சர்மா ஒலி நேபாள பிரதமராக மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியதால், நேற்று இரவு மீண்டும் பிரதமர் பதவிக்கு சர்மா ஒலி நியமிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, 69 வயதான ஒலிக்கு சத்தியப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை இன்று செய்து வைத்தார்.
சிபிஎன்-யுஎம்எல் தலைவரான ஒலி கடந்த திங்களன்று பிரதிநிதிகள் சபையில் ஒரு முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் பதவியேற்றுள்ள ஒலி இப்போது 30 நாட்களுக்குள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்கும். அது தோல்வியுற்றால், அரசியலமைப்பின் 76 (5) வது பிரிவின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சி தொடங்கப்படும்.
முன்னதாக அவர் அக்டோபர் 11, 2015 முதல் ஆகஸ்ட் 3, 2016 வரையிலும், மீண்டும் பிப்ரவரி 15, 2018 முதல் மே 13, 2021 வரையிலும் பிரதமராக பணியாற்றினார்.
கடந்த வருடம் முதலே நேபாளத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், சர்மா ஒலியின் பதவி நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.