• 532
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்

கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.

முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .

பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.

கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.

முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.
நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். 

காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .

" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.." சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .
குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .

" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? " மறுபடி பெருசு உருமியது.

" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..
அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"
அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.

இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .

படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.

எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.

ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.

" தம்பி தோசை வரல .."

" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."

" தெரியுதுப்பா .. அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"

" உள்ள இருப்பான் சார் .. போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .
அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.

" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.

" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,
இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..  அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.

எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.

அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.
சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.

" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..

சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"

" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .." எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.
திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே .. ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.

" வத்தக் குழம்பு இல்லையா ..?"

" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.

" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.

இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும். மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .

அவருக்கு பரம திருப்தி.

அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .

" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"

" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .." மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.

காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று. காபியை இழக்க எனக்கு மனமில்லை.

ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும் ஒரு சிப் இழுத்துகொண்டேன்.

புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.
" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..
வா அந்த லைனுக்கு போவோம் .."
அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.
அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.

என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர். 

இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது.

 இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் , என் அருகில் அனைவரும் புது முகங்கள்.
ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.
என் அருகில் வந்ததும் , " பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் . 
பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே , ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள்.

வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.

எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .

மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு , இலையை மூடிவிட்டு
ஒரு கையில் ஐஸ் கிரீம் ,,, மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது
" சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே .. உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.

திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால், " நான் இல்லப்பா .." என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்.

நிம்மதியா திங்கவிட மாட்றானுவ.....
உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது.

உணவு வீணடிக்கப்படுகிறது.

- படித்ததில் ரசித்தது
Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14