Feed Item
Added a post 

இப்பகுதிகளில் யுத்தகாலத்தில் பயன் படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னரும் மீள்குடியேறிய மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன.இவ்வாறு 13 வருடங்கள் கடந்தாலும் இந்த வெடிபொருட்களின் ஆபத்துக்களை இன்னும் பலர் உணர்ந்து கொள்ளாத நிலைகாணப்படுகின்றது.  வெடிபொருட்களை சட்டவிரோதமாக எடுத்து அவற்றிலிருந்து மருந்துகளை பிரித்தெடுக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இவ்வாறு வெடி பொருளிலிருந்து வெடிமருந்தை பிரித்து எடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட விபத்தின் போது ஒரு இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டதுடன் அவருடைய சகோதரரும் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கை நிலங்களில் தமது வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில பகுதிகள் வெடிபொருட்களின் ஆபத்துக்குள் காணப்படுகின்றன.

குறிப்பாக வடபகுதியின் மிக ஆபத்தான பகுதியாகவே கிளாலி முதல் முகமாலை நாகர்வோவில் வரையான பகுதிகள் மிகவும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன.

யாழ் குடாநாட்டினையும் வன்னிப்பிரதேசத்தையும் இணைக்கின்ற கிளாலி முதல் நாகர்கோவில் வரைக்குமான கிட்டத்தட்ட ஏழு கிலோ மீற்றர் வரையான பகுதி 13 ஆண்டுகளுக்கு மேல் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் எண்ணற்ற மிகவும் பெறுமதி வாய்ந்த உயிர்களை விலையாகக் கொடுத்தன.அத்துடன் ஏராளமானவர்கள் உடல் அபயங்களை இழந்து இன்னும் அங்கவீனர்களாகவும் உள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் ஆரம்பத்தில் மக்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் அவர்களால் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்கு வளர்க்கப்பட்ட ஏராளமான வானுயர்ந்த தென்னை பனை மரங்கள் வீடுகள் கட்டடங்கள் அனைத்துமே யுத்த காயங்களை தாங்கி சிதைத்து சின்னாபின்னமாகி இன்றும் காணப்படுகின்றன.தற்போது இவ்வாறு வெடிபொருட்களின் ஆபத்தான பகுதிகளாக காணப்பட்ட பெருமளவான பகுதிகள் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடிமயர்விற்கு அனுதிக்கப்பட்டு அவர்களுக்கான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை தெற்கு இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி என பல்வேறு பகுதிகள் இன்னும் வெடிபொருட்களின் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் இப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாதுள்ளது.தற்போது இப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு 248 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் தமது பதிவுகளை மேற்கொண்டு விட்டு இதனை அண்டிய பகுதிகளிலும் வெளிமாவட்டங்களிலும் வாடகை வீடுகள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் மிகவும் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்ற பாதுகாப்பற்ற பகுதிக்குள் சென்ற பலர் வெடிபொருட்களில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் உடல் அபயங்களையும் இழந்துள்ளனர்.வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாகக் காணப்படும் இப்பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவற்றைப் பொருட்படுத்தாது அதற்குள் சென்று வெடி பொருட்களை எடுத்தல் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளுதல் என்பவற்றால் விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றன.

இவ்வாறான விபத்துக்களை தவித்துக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதும் தற்போது இது தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது.வெடிபொருள் ஆபத்துக்கள் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று இதில் இருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை கடந்த கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அத்துடன் வெடிபொருள் ஆபத்தான பகுதிகளில் கண்ணிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் வடக்கில் உள்ள 640 கிராமங்களில் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும் அப்போது யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சு- பாஸ்கரன்)

  • 324