இதயம் உண்மையிலேயே வலித்தது.வீடியோவில் ஒரு இராணுவ வீரர் கரடுமுரடாக, மேடு பள்ளமாக, கற்கள் சிதறிக்கிடக்கும் மலைப்பகுதியில் வேகமாக ஓடுவது போல நடந்து விறுவிறு என்று வருகிறார். வீடியோவில் அங்கே வீசும் காற்றின் ஓசை கேட்கிறது.திறந்தவெளி, நிச்சயம் மலைப்பகுதியின் குளிர்க்காற்றாகத்தான் இருக்கும்.வந்து ஒரு சற்றே பாங்கான இடத்தில் அமர்கிறார். கையில் ஒரு சிறிய டிஃபன் பாக்ஸ். அதை கீழே வைக்கிறார். பின்னர், தன் கார்கோ - மிலிட்டரி உடையில் இருந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுக்கிறார். அதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அந்த சிறிய பேண்ட் பாக்கெட்டில் அந்தப் பொட்டலம் அடைக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் எடுக்க சிரமம்.பின்னர் சுற்றும், முற்றும் பார்க்கிறார். ஒரு ஸ்லாப் போன்ற கல் கண்ணில் படுகிறது. அதை எதிரே வைத்துவிட்டு, தன் கைகளால் அதை சுத்தம் செய்கிறார். மண் துகள்கள், தூசி விரட்டப்படுகின்றன.அந்த ஃப்ளாட்டான கல்லின் மேல் அந்த டிஃபன் பாக்ஸை வைத்து அதைத் திறக்கிறார். பின்னர் அந்த காகிதப் பொட்டலத்தையும் திறக்கிறார்.பொட்டலத்தில் கசங்கிய நிலையில் சப்பாத்திகள் இருக்கின்றன. தூசு தட்டிய கைகளை சுத்தம் செய்ய அங்கே வசதியில்லை. அவசரமாக சப்பாத்தியை விண்டு, டிஃபன் பாக்ஸில் இருக்கும் தொட்டுக்கொள்ள வைத்திருக்கும் சப்ஜியில் நனைத்து வாயில் போட்டுக் கொள்கிறார். மென்று முழுங்கியபடி இன்னொரு விள்ளல், சப்ஜியில் தோயல், வாயில் போடல்.சாப்பாட்டுக்கு உட்கார்ந்தாலே ஒரு பாட்டில் குளிர்ந்த நீருடன் உட்காரும் நான் யோசிக்கிறேன். என்ன இது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், எப்படி சாப்பிடுகிறார்.ஒருவேளை ஏதாவது வாட்டர் பேக் வைத்திருப்பாரோ?சப்பாத்தியை மென்றபடி சுற்றும், முற்றும் பார்க்கிறார். அருகில் இருக்கும் பள்ளத்தில் எதையோ தேடுகிறார். ஒரு துணி துண்டம் கிடக்கிறது. அதை எடுத்துக் கொண்டு மீண்டும் உணவு இருக்கும் பக்கம் வருகிறார்.இதுவரை நம் நெஞ்சம் கொஞ்சம் அசையாவிட்டால், இப்போது நிச்சயம் அசைந்து கொடுக்கும். பிசையச்செய்யும்.கீழே இருந்து கொண்டு வந்த அந்த கந்தல் துணியை தன் முன்னே மண்ணில் இருக்கும் ஒரு சிறிய குழியில் நுழைக்கிறார். அங்கே கொஞ்சமே, கொஞ்சம் ஈரம் (கல்லுக்குள் ஈரம்) இருக்கிறது போல.துணியை அழுத்தி வைத்துவிட்டு இன்னொரு விள்ளல் சப்பாத்தியை சாப்பிடுகிறார். ஒரு கையால் துணியை குழியில் அழுத்துகிறார்.அழுத்தி அழுத்தி துணியை நுழைத்து, பின் அதை எடுக்கிறார். தன் வாயைத் திறந்து நனைந்த துணியை பிழிகிறார். அதுதான் அவரது குடிநீர். சில துளிகள். கங்கையில் இருந்து நமக்கு புனிதமாக கொண்டு வரும் தண்ணீரைவிட மகத்தானது.ஹம்மாடி... எத்தனை கடின வாழ்க்கை?இராணுவவீரர்கள் தேசப்பாதுகாப்புக்காக எத்தனை எத்தனை சவுகரியங்களை விட்டொழிக்கிறார்கள்?அவர் பிழிந்து கொண்டு வாயை நனைத்த அந்த சிறு துளி தண்ணீரில் என் இதயமும் சேர்ந்து அழுது நனைந்தது. இதை மிகையாக சொல்லவில்லை. நிஜமே.அங்கே அவரையும், அந்த வீடியோ எடுத்தவரையும் தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அவரே வீடியோ எடுக்க மொபைலை செட் செய்திருக்கலாம். எப்படி இருந்தாலும், அந்த சிறு வீடியோ படம் நமக்கு நம்மைக்காக்கும் இராணுவத்தினரின் தியாகத்தை எடுத்துக்காட்டியது.இதுபோல லட்சக்கணக்கில் நமது இராணுவவீரர்கள் தசாப்தங்களாக தேச சேவையில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காணொளிகள்தான் சிறிதளவேனும் நமக்கு அவர்கள் வாழ்க்கையைக் காட்டி, நம்மை அவர்கள் மீது நன்றியுணர்வை ஏற்படுத்துகிறது.இந்த இராணுவவீரர் யார், என்ன ஜாதி, என்ன மதம், அவருடைய குடும்பம் என்ன, எத்தனை குழந்தைகள் என்று ஒன்றும் தெரியாது. அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தேசநலனுக்காக உயிரை அர்ப்பணிக்கத் தயாரான மனதுடன்தான் அவரும், அவரைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்.ஒரு சொட்டு தண்ணீருக்கு அவர் படும்பாட்டைப் பார்க்கும்போது, நாம் வெகு அசட்டையாக குழாயை மூடாமல் வீணாக்கும் தண்ணீரும், வாட்டர் டேங்க் மோட்டர்களை மூடாமல் வழிந்து ஓடும் தண்ணீரும், பழுதான குழாயினால் இரவு முழுக்க சொட்டு சொட்டென்று ஒழுகும் தண்ணீரும் அதன் விலைமதிப்பின்மையை உணர்த்தியது.ஒரு விஷயம் இல்லாதபோதுதான் அதன் அருமை நமக்குத் தெரியும்.போர்க்காலங்களில்தான் அமைதியின் வலிமை புரியும். அந்த அமைதியை நமக்கு அல்லும், பகலும் தர பாடுபடும் இந்த பெயர் தெரியாத இராணுவ வீரர்களின் மகிமை, தியாகம் புரியும்.