·   ·  265 posts
  •  ·  1 friends
  • 1 followers

ஆயாம்மா........

இயல்புக்கு மாறாய் அன்று

சிறியதும் பெரியதுமாய்

ஆரஞ்சுநிற பூக்கள்போட்ட சேலையும்

பச்சை நிற ரவிக்கையும்

நெற்றியில் மேலிருந்து கீழாய்

சந்தனம் திருநீறு குங்குமமும்

இறுக்கி முடிந்த சுருண்ட கொண்டையில்

அடர்சாமந்தியுமாய் ஆளே மாறி

பளிச்சென பணியிடத்திற்கு வந்தாள்

வந்த மாத்திரத்தில்

இன்னிக்கு என்ன புது சேலை?

வராண்டா துடைத்தபடியே

ஆர்வமாய் கேட்டாள் தோழி ஒருத்தி

கேள்விக்கு காத்திருந்தவளாய்

பொறந்த நாளு எனக்கு என ஆசையாய் சொல்லி முடிக்கும் முன்னே

"ஆயாம்மா".....உச்ச குரலில் விளி வந்த திசைநோக்கி

முகக்கவசம் கையுறைகள் சகிதம்

படுக்கை தாண்டி தரையெங்கும்

விசிறி அடித்த

வாந்தி துடைக்க வார்ட்டுக்குள் விரைந்தவளுக்கு

புருவம் நிமிர்த்த நேரமில்லை

தொடர் அழைப்புகளுக்கு

தொய்வின்றி ஓடுகிறாள்

உறவுகளே முகம் சுளிக்கும்

துர்நாற்றத்தினூடே

பிரக்ஞை குறைந்த நோயாளின்

நிரம்பி வழியும் சிறுநீர்க்குடுவையை வடிக்கும் போதும்

குடல் கழிவினை

சிரத்தையாய் துடைக்கும் போதும்

தவசியாய் மிளிர்கிறாள்

தேநீர் குடிப்பதற்காய்

மாடிப் படியோரம்

ஒதுங்கும் சொற்ப நேரத்திலும்

உணவு வேளையைக்கடந்து பசிமுற்றி சோற்று டப்பாவைத்திறக்கும் போதிலும்

அவசர அழைப்பை எதிர்நோக்கியே

அள்ளி விழுங்குகிறாள்

ஒரு முறை கூட

உடல் கூசாதா?

உமட்டல் எடுக்காதா?

சிறுநீர் நெடி தாக்கி

வாய்தனை இறுக்கி

மூச்சை அடக்கையில் தின்ன சோறு தொண்டைக்கு வராதா?

தன் கைகொண்டு நோயாளிக்கு கால்கழுவி விடுகையில் அருவருப்பு மேலோங்காதா?

சீழ் வடியும் காயங்களையும்

ரத்தம் வடியும் துவாரங்களையும்

சுத்தம் செய்கையில் மேலோங்கும் கவுல்

குடலைப் புரட்டாதா?

அருவருப்பின் கீற்றினை

அவள் முகத்தில்

கண்டுபிடிப்பவருக்கு

ஆயிரம் ருபாய் என

பயமின்றி பந்தயம் கட்டலாம்

உமட்டலும் புரட்டலும்

அருவருப்பும் அசிங்கமும்

முக சுளிப்பும் முணுமுணுப்பும்

சலிப்பும் சிடுசிடுப்பும்

சாமானியர்களுக்குத்தான் போலும்

தொட்டும் தூக்கியும்

துடைத்தும் உடுத்திவிட்டும்

நித்தமும் தன் ஸ்பரிசத்தினால்

நம்பிக்கை களிம்பு பூசும்

சகிக்கும் தன்மையை வரமாய் கொண்ட

இவள் போன்ற தேவதைகளுக்கு

இனிப்பு வணங்கி பிறந்த நாள் கொண்டாட ஏது நேரம்..

இவர்களை மட்டும் ஏன் விருதுக்கு தகுதியானவர்களாய் பார்க்க மறுக்கிறோம்...

பிறந்த வாழ்த்துகள் ஆயாம்மா....

  • 37
  • More
Comments (0)
Login or Join to comment.