- · 5 friends
-
I
கந்தர் சஷ்டி விரதம்
அன்னை சக்தியிடம் முருகன் வேல்வாங்கும் ஐதீக நாடகம் !
தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப்பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக்கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்பது பெயர்.
பெரிய சிவாலயங்களிலும் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களிலும் சில அம்மன் கோயில்களிலும் மகா கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டிகளில் நிறைவு பெறும். இதனைக் கந்தர் சஷ்டி விரதம் எனவும் அழைப்பர்.
பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். சில ஆலயங்களில் முருகனுக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, காலையும் மாலையும் முருகன் வீதி உலா நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது முருகன் சூரபத்மனையும் அவனது அசுரக் கூட்டங்களையும் அழிக்கும் ஐதீக நாடகம் நடத்தப்படும்.
இந்த நாடகத்தில் முருகன் நவவீரர், நாரதர் ஆகியோரின் வேடம் தரித்து ஒரு கூட்டமும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி, பானுகோபன், அவனது சேனாதிபதிகள் மற்றோர் கூட்டமும் ஆக இரண்டு பிரிவினராக இருந்து நாடகத்தை நடத்துகின்றனர்.
இந்த இரு சாரருமே காப்பு கட்டிக் கொண்டு விரதமிருப்பர். சூரசம்ஹார நாளான சஷ்டியன்று பிற்பகலில் முருகன் நவவீரர்கள் நாரதர் வேடமிட்டவர்கள் கூட்டமாக அம்பிகை சந்நதியின் முன்பு நிற்பர். அலங்கரிக்கப்பட்ட முருகன் திருவுருவத்தை எடுத்து வந்து அம்பிகை சந்நதிக்கு நேர் எதிரில் நிறுத்துவர்.
முதலில், நாரதர் வேடம் தரித்தவர் காசிப முனிவனுக்கு மாயையிடம் சூரபத்மனும் தம்பி தங்கையரும் அசுரக் கூட்டங்களும் பிறப்பது; அவர்கள் தவம்; 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆண்டது; அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்தது; தேவர்கள் துன்பம் தாள மாட்டாமல் சிவபெருமானைச் சரண் அடைந்தது; சிவபெருமான் முருகனைப் படைத்து அளித்தது; முருகன் பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்தது; தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முருகனை அழைத்து சூரபத்மனை அழித்து வர ஆணை தந்தது; முருகன் அதை ஏற்றுக் கொண்டு அன்னையின் அனுமதி வேண்டி அவள் வாயிலில் நிற்பது வரையிலான கதையைச் சுருக்கமாக பாடலாகவோ, விருத்தமாகவோ, உரை நடையாகவோ கூறுவார்.
பின்னர் அம்பிகையைத் துதித்துப் பாடல்கள் பாடப்படும். அம்பிகை ஆசி வழங்குவதுடன் வேல் தருவதாகக் கூறும் பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சர்வ வாத்தியங்களும் முழங்க அம்பிகைக்கும் முருகனுக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடக்கும். பின்னர் அர்ச்சகர் அம்பிகையின் கையில் வைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து முருகன் திருக்கரத்தில் வைப்பார். ஊர்ப் பெரியவர்கள், ஊர்ப் பொதுவில் வழிபடப்படும் கனத்த இரும்பு வேலாயுதத்தை எடுத்து வந்து முருகன் வேடமிட்டவரிடம் அளிப்பார். உடனிருக்கும் நவவீரர்கள் வேடம் புனைந்தவர்கள் வில்லம்பு அல்லது நெடிய பட்டாக்கத்தியைத் தாங்குவர்.
அவர்கள் அம்பிகையை வணங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு வீதிஉலாவாகச் செல்வர். முருகனைக் குதிரை அல்லது ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்த்தித் தம்முடன் எடுத்துச் செல்வர். இதுவே பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும். எண்ணற்ற தலங்களில் இத்தகைய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், அவற்றில் தலையானதாக இருப்பது சிக்கலில் நடைபெறுவதுதான்.
‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம். முருகனுடன் தோன்றிய வீரவாகுதேவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்று புராணம் போற்றும் செங்குந்தர்களான கைக்கோளர்கள் பெரும்பாலான ஊர்களில் சூரசம்ஹார நாடகத்தினை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் செட்டியார்கள் நடத்துகின்றனர். சிவபெருமானிடமிருந்து முருகன் வேல் வாங்குதல் பொதுவாக சூரசம்ஹார விழாவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியே அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது.
அபூர்வமாக சில தலங்களில் சிவபெருமானிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தின்போது முருகன் சபைக்கு எழுந்தருள்கின்றார். அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும் முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர்.
நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.
முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார். இவை மகா கந்தபுராணத்தில் சிவபெருமான் முருகனுக்கு வேலாயுதத்தை அளித்ததை அடியொற்றி நடத்தப்படுவதாகும்.
ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்...!
சரவணபவ குஹா சரணம்...!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·