- · 5 friends
-
I

சிரஞ்ஜீவி (குட்டிக்கதை)
ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தேறியது. ராமன் அரியணை ஏறி அமர்ந்தான். உடனே அனுமன் கொஞ்சமும் அலுங்காமல், நலுங்காமல் அந்த சிம்மாசனத்தைத் தூக்கித் தாங்கிக்கொண்டான். அங்கதன் உடைவாளைத் தன் கையில் பற்றிக்கொண்டு ஒரு பாதுகாவலனாக நின்றிருந்தான்.
பரதன் சிம்மாதனத்துக்கு மேலாக வெண் கொற்றக் குடையைப் பிடித்திருந்தான். லட்சுமணனும், சத்ருக்னனும் இருபுறமும் நின்றபடி வெண் சாமரம் வீசினார்கள்.
அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நிறைவேறின. விருந்தினர் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு விஞ்சியும் பொன்னும், பொருளும் வாரி வாரி வழங்கினான் ராமன்.
விபீஷணனின் முறை வந்தது. ‘‘உனக்கென்று நான் தருவதற்கு என்ன இருக்கிறது விபீஷணா? என் சீதை என்னிடம் வந்து சேருவதற்குப் பெரும் பொறுப்பை மேற்கொண்டவனல்லவா நீ?
உனக்கு எங்கள் குலத்தார் வழிபடும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விக்ரகத்தை அளிக்கிறேன். அதோடு நீ என்றென்றும் சிரஞ்ஜீவியாக, வாழ வரமும் அளிக்கிறேன்.…’’
விபீஷணன் மிகுந்த அடக்கத்துடன், அந்தப் பெருமையை ஏற்றுக்கொண்டான். ஆனால் உடனிருந்த சீதை திடுக்கிட்டாள். அவளைப் பார்த்து சந்தேகமாய் வியந்தான் ராமன். ‘‘என்ன சீதா…?’’ என்று அன்பு பொங்க கேட்டான்.
‘‘வந்து… அசோகவனத்தில் உயிர் பிரித்துக் கொள்ளும் துக்கத்தில் ஆழ்ந்திருந்த என்னை ‘ராம், ராம்’ என்று தங்கள் நாமம் சொல்லி உயிர்ப்பித்தவன் நம் அனுமன். தங்களை மீண்டும் சந்தித்துவிட முடியும் என்று அவன் கொடுத்த நம்பிக்கை ஆனந்தத்தில், அவனை நான் ‘சிரஞ்ஜீவியாக வாழ்க’ என்று வாழ்த்தினேன்…’’ தயங்கியபடி சொன்னாள் சீதை.
‘‘சரி, இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது?’’
‘‘இப்போது நீங்கள் விபீஷணனை ‘சிரஞ்ஜீவி’ என்று வாழ்த்தினீர்கள். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட அதே பட்டத்தை இப்போது விபீஷணனும் பெறுவானானால், அது தன் முக்கியத்துவத்தைக் குறைத்ததுபோல ஆகும் என்று அனுமன் வருந்த மாட்டானா?’’
ராமன் புரிந்துகொண்டான். உடனே பரவசத்தில் கண்மூடி ஆனந்தித்திருந்த அனுமனருகே சென்று அவனை மெல்லத் தொட்டான். ‘‘ஆஞ்சநேயா…’’ என்று பாசத்துடன் அழைத்தான். பளிச்சென்று கண் மலர்ந்தான் அனுமன்.
‘‘வந்து… இப்போது நான் விபீஷணனை ‘சிரஞ்ஜீவி’யாக வாழ வாழ்த்தினேன்…’’
‘‘மிகுந்த சந்தோஷத்துடன் அதை கவனித்தேன் ஐயனே..’
‘‘சந்தோஷமா! அசோகவனத்தில் சீதை உன்னை ‘சிரஞ்ஜீவி’ என்று ஆசிர்வதித்தாள். இப்போது நான் விபீஷணனை அவ்வாறே ஆசிர்வதித்தேன். இதனால் உனக்கு வருத்தம் இல்லையா, விபீஷணன் மீது பொறாமையில்லையா?’’
‘‘இல்லை ஐயனே…’’ கண்களில் நீர் பனிக்கச் சொன்னான் அனுமன். ‘‘அன்னையோ, நீங்களோ இருவரில் யார் ஆசிர்வதித்தாலும், அதற்குச் சமமான பலன் உண்டு என்பதை நான் அறிவேன்.
‘சிரஞ்ஜீவி’ பட்டம் பெறுபவன் நிரந்தரமானவன், அழிவதில்லை. இந்த வகையில் விபீஷணனும் சிரஞ்ஜீவி, நானும் சிரஞ்ஜீவி.
‘‘நான் என்றென்றும் ராமநாம ஜபத்திலேயே ஆழ்ந்துபோகிறவன். அதைவிட யாரேனும் ராமநாமம் சொன்னல், அதைக் காது குளிரக் கேட்டு இன்புறவே மிகவும் விரும்புகிறேன். எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகம் முற்றிலுமாக அழிந்து போகக்கூடும். யாருமே உயிர் பிழைத்திருக்க முடியாத சூழ்நிலைகூட உருவாகும். ஆனாலும், அப்போதும் விபீஷணனும், நானும் சிரஞ்ஜீவிகளாக இருப்போம் இல்லையா…?’’
ராமன் அதிசயமாக அனுமனைப் பார்த்தான். சீதையோ பிரமித்து நின்றாள்
‘‘ஐயனே, நீங்கள் வைகுந்தம் ஏகிவிடுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகும் இந்த பிரபஞ்சமே ராமநாம பலத்தால்தான் வாழ்ந்தாக வேண்டும். இந்த உலகமே முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், நான் மட்டுமே தனித்து விடப்படுவேனானால் என் காது குளிர, அகம் மகிழ, ராமநாமம் சொல்லிக் கேட்பதற்கு யாருமே இல்லாமல் போய்விடுவார்களே!
ஆனால், விபீஷணனும் சிரஞ்ஜீவி என்பதால், அவன் சொல்லச் சொல்ல நான் மெய்மறந்து ராமநாமத்தைக் கேட்டுக் கொண்டிருப்பேனே! இதைவிட பேறு எனக்கு வேறு என்ன வேண்டும்?
என் ஐயனே, இத்தகைய எதிர்காலத் தவிப்பிலிருந்து என்னை இப்போதே காத்து விட்டீர்கள். இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!’’ கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகப் பெருக்கியபடியே சொன்னான் அனுமன்.
அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டான் ராமன்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·