- · 5 friends
-
I
நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்
தலம் - திருமழப்பாடி.
எல்லாம்வல்ல பரம்பொருள் சிவபெருமானின் அதிகாரபூர்வ காப்பாளனான நந்திக்கு ஒவ்வொரு வருடமும், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் கல்யாணம் நடக்கிறது!
அரியலூர் மாவட்டம் திருமழபாடியில்தான் இந்த சிறப்பு நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள நடந்தேறுகிறது.
நந்திகேஸ்வரர் அவதரித்தது தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த அந்தணர்புரத்தில். மகப்பேறு இல்லாத சிலாத முனிவர், பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார். இறைவனின் கருணை உடனே அவருக்கு சித்தித்தது. யாகம் செய்யும் ரிஷிகள் அதற்காகத் தேர்ந்தெடுக்கும் நிலத்தைத் தாமே உழுவது வழக்கம். அந்தவகையில் சிலாத முனிவர் வயலை உழுதபோது, நுகத்தடியில் ஒரு பெட்டி சிக்கியது. திறந்து பார்த்தால், உள்ளே நந்திதேவர், முனிவரின் ஏக்கம் தீர்க்கக் காட்சி தந்தார்.
அவர் வளர்ந்து, இறை உணர்விலும் திளைத்து தேஜஸ் பெற, அந்த இறைக் குழந்தைக்கு, திருவையாறு இறைவனான ஐயாறப்பன், நந்திகேஸ்வரன் என்று பெயர் சூட்டி, தம் மெய்க்காப்பாளனாக்கி, பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். அவருக்கு, திருமழபாடியில், வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசாம்பிகையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார்.
பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் (22.03.21)அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம்.
புனர்பூசம் நட்சத்திர நாளில் (23.03.21) காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.
மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.
மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர். அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·