சர்வதேச பட்டியலில் இடம்பிடித்த கனடிய மருத்துவமனை
உலகின் மிகச் சிறந்த மருத்துவமனை பட்டியலில் கனடிய மருத்துவமனையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த மருத்துவமனைகள் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ மருத்துவமனைக்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
நியூஸ்வீக் சஞ்சிகையினால் இந்த தரப்படுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் 30 நாடுகளில் சுமார் 2400 மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் குறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர், தாதியர், நோயாளர் எண்ணிக்கை விகிதம், நோயாளர்களின் திருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் சுமார் 80000 மருத்துவ பணியாளர்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சர்வதேச தரப்படுத்தலில் முதல் பத்து இடங்களை வகிக்கும் மருத்துவமனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தர வரிசையில் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனை முதல் இடத்தையும், அமெரிக்காவின் கிளெவ்லான்ட் மருத்துவமனை இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.