நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம் : ஜனாதிபதி
நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற 'சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது விழா 2023' இலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் சிறந்த பெண் வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் வியாபாரம், சந்தை பிரவேசத்தை வலுவூட்டும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டதோடு, சார்க் வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு விசேட பிரிவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கப்பட்டது. சார்க் பிரிவு வெற்றியாளர்களுக்கான விருதுகள் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவால் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் பெண்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 1985 ஆம் ஆண்டு தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் (WCIC) ஸ்தாபிக்கப்பட்டது.
தொழில் வல்லுனர்கள் மற்றும் தமது சொந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தும் பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் 300 அங்கத்தவர்களை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.