இளம் வயதில் மேயர் ஆன கல்லூரி மாணவி
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கேரளாவின் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அண்மையில், கேரளாவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், அம்மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இதில், திருவனந்தபுரம் மாநகராட்சியில், முடவன்முகல் வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திருவனந்தபுரத்தில் போட்டியிட்டவர்களில் ஆர்யா ராஜேந்திரன்தான் மிகவும் இளைய வேட்பாளராக இருந்தார்.
இந்த நிலையில், கேரளாவில் வெள்ளிக்கிழமை கூடிய சிபிஎம் மாவட்ட செயற்குழு ஆர்யாவை மேயராக தேர்ந்தெடுத்துள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு இளம் பெண் ஆர்யாவை பரிசீலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதால் கட்சி அவரது பெயரை மேயர் பதவிக்கு இறுதி செய்தது.
ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து புனிதர்கள் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாலா சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். அதோடு, சிபிஎம்-மின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாநில அலுவலக பொறுப்பாளராகவும் உள்ளார். அதோடு, அவர் சிபிஎம் கிளைக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீஷியன், அவருடைய தாயார் லதா எல்.ஐ.சி முகவராக உள்ளார்.
திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து, ஆர்யா கூறுகையில், இந்த பதவி தொடர்பாக இதுவரை கட்சியிடமிருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்றும், தனக்கு வழங்கப்படும் எந்த பொறுப்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும், “இப்போது நான் ஒரு கவுன்சிலராக செயல்படுகிறேன். ஆனால், கட்சி எனக்கு வழங்கும் பொறுப்புகளை நான் ஏற்றுக்கொள்வேன்” என்று ஆர்யா கூறினார்.
ஆர்யா தனது கவனத்தை முக்கியமாக பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.