ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி - ரணில் விக்கிரமசிங்க
தன்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று (27) காலை நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"அவர்களின் பட்டியலைக் பார்த்தால் அவரது அரசாங்கம் மூன்று மாதங்கள் அல்ல மூன்று வாரங்கள் செல்ல முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை.
நாட்டிற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. அனுபவமுள்ளவர்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவர்களில் பெரும்பான்மையானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு. அனுபவம் வாய்ந்த பெரும்பான்மையானவர்கள் இருந்தால் தான் அவருக்கும் மூன்றாண்டுகள் ஏனும் செல்ல முடியும்
தோற்றதால் என்னை வீட்டில் இருக்குமாறு சொல்கின்றனர். நான் தோற்றதை, ஒப்புக்கொள்கிறேன். நான் ஜனாதிபதி தேர்தலுக்கு வந்தேன், வாக்கு கேட்டேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் தோற்றேன்.
ஆனால் அவருக்கும் பெரும்பான்மை வழங்கப்படவில்லை. 51% கிடைக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி, அவரும் பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதி.
அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை, அவ்வளவுதான்" என்றார்.