நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றேன் - ஜெய்சங்கரிடம் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்
இலங்கையில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளோம். இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிப்பதுடன் எனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் என்னால் இயன்ற பணிகளை ஆற்றியுள்ளேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிய முழுமையான ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் (04) இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போதே, ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணும் என்று நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பிரதித் தூதுவர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
000