பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது. இனிமேல் அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும்.
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. எனவே பாகிஸ்தானுடன் எந்த மாதிரியான உறவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே பிரச்சினை.
இந்தியா செயலற்ற நாடு கிடையாது. எந்த ஒரு நிகழ்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், அதற்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம்.
பாகிஸ்தானில், பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டது. இத்தகைய அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.
இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது செயல்திட்டமாக வைத்து உள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பாகிஸ்தானின் கொள்கையை செயலற்றதாக்கி விட்டோம் என ஜெய்சங்கர் கூறினார்.
000