சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னிப்புக் கேட்டார் பிரதமர் மோடி
மகாராஷ்டிராவின் பால்கரில், வத்வான் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், "சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். எனக்கும், எனது சகாக்களுக்கும், எல்லோருக்கும் சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ‘பண்பு’ முற்றிலும் வேறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கத்துக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல" என்று தெரிவித்தார்.
சிந்துதுர்க்கின் மல்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிச.4) திறந்து வைக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி சிலை திங்கள்கிழமை (ஆக.26) மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலை கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் நேற்று (வியாழக்கிழமை) கோலாப்பூரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது சோகமான நிகழ்வு. எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும்போது காற்றின் வேகத்தை சிற்பி ஆய்வு செய்யவில்லை. இந்தியக் கடற்படை உதவியுடன் இதே இடத்தில் புதிய சிவாஜி சிலையை நாங்கள் அமைப்போம்” என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.