- · 5 friends
-
I

ஆசிரியர் கேட்ட தந்திரமான கேள்விகள் (குட்டிக்கதை)
பரீட்சையில் மாணவர்களுக்கு என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கலாம் என இரவெல்லாம் கண் முழித்து கேள்விகளை தயாரித்த சந்தோஷத்தோடு வகுப்பறைக்குள் நுழைந்த கணித ஆசிரியருக்கு பகீர் என்று இருந்தது.
அவர் அமர வேண்டிய நாற்காலி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சீலிங்கில் இருந்த ஃபேன் மாட்டும் வளையத்தில் ஒரு கயிற்றால் அந்த நாற்காலியை கட்டி தொங்க விட்டிருந்தார்கள் மாணவர்கள்.
யார் தொங்க விட்டிருப்பார்கள் என கண்களில் கேள்வி காட்டி மாணவர்களை நோட்டம் விட்டார் ஆசிரியர். முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார்கள் மாணவர்கள்.
அவருக்கு புரிந்து. எத்தனை முறை கேட்டாலும், எப்படி கேட்டாலும் இந்த செயலை செய்தது யார் என யாரும் சொல்லப் போவதில்லை.
அதனால் ஆசிரியர் எதையும் கண்டு கொள்ளாதது போல் மாணவர்களிடம் அமைதியாக பேசினார்,
'இப்போ நடக்கப் போற கணக்கு பரிட்சை மிக முக்கியமான பரிட்சை.
இந்தப் பரிட்சை வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். வெறும் மூன்று கேள்விகள் மட்டும் தான் கேட்க போகிறேன். மொத்த மதிப்பெண் 100.
இதில் நீங்கள் பாஸாகி விட்டால் முழு ஆண்டு தேர்வில் கணக்கு எழுத வேண்டியது இல்லை.
இதில் ஃபெயில் ஆகிவிட்டால் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சியாகி போக முடியாது. நீங்கள் இந்த வகுப்பை மீண்டும் படிக்க வேண்டி வரும்.
அதனால் கவனமாக கேள்விக்கு பதில் தாருங்கள். போர்டில் கேள்விகளை எழுதி போடட்டுமா?'
மாணவர்கள் உற்சாகமாக 'எழுதி போடுங்கள் சார்' என்றனர்.
மாணவர்களை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு போர்டில் கேள்விகளை எழுதினார் ஆசிரியர்,
கேள்வி 1: நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் (1 மதிப்பெண்).
கேள்வி 2: நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிடுங்கள். (1 மதிப்பெண்)
கேள்வி 3: நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும், அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள். (98 மதிப்பெண்கள்)