-
- 3 friends

சனிப்பெயர்ச்சியில் குழப்பம்?
தற்போது சனிப்பெயர்ச்சி தான் நாட்டில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு பெயர்ச்சி நடைபெறும்போது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலிலும் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பத்திரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களை புத்தகமாக வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் பிரபலமான ஜோதிடர்களை அழைத்து சனிப்பெயர்ச்சி பலன்களை பேசவைக்கின்றன.
இந்தியாவில் கேரளா தவிர்த்த இதர தென் மாநிலங்களில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு விதமான கணித முறைகளை கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆரியபட்டீயத்தை அடிப்படையாக கொண்டு வரருசி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கடபயாதி வாக்கியங்களை வைத்து கணிக்கப்பட்டதாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது நவீன வானியல் சூத்திரங்களை கொண்டு கணிக்கப்பட்டவை ஆகும். வடமாநிலங்களில் வாக்கிய கணிதத்திற்கு பூர்வ பத்ததி என்று பெயராகும். மேலும் அங்கு சூரிய சித்தாந்த கணிதத்தை கொண்டு சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் வெளிவருகிறது. கிரகலாகவம் என்னும் கிரந்தத்தின் கணிதங்களை பின்பற்றியும் ஒருசில பஞ்சாங்கங்கள் வெளிவருகிறது. ஆக அங்கு 1.திருக்கணிதம் 2.பூர்வபத்ததி(வாக்கியம்) 3.சூரியசித்தாந்தம் 4. கிரகலாகவம் என நான்கு வகை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.
கடந்த 29-03-2025 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களோ அடுத்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் தேதி தான் சனிப் பெயர்ச்சி, இப்போது கிடையாது என்கிறார்கள். திருநள்ளாறு தேவஸ்தானம் இன்னும் ஒரு படி மேலே சென்று தற்போது சனிப்பெயர்ச்சி இல்லை என அறிக்கையே வெளியிட்டு விட்டார்கள். இதனால் மக்களிடையே மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் இவ்விரு பஞ்சாங்கங்களிலும் மாறுபட்ட தேதிகளில் பெயர்ச்சி ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கத்தை இங்கே பார்ப்போம்.
பொதுவாக சனியின் சஞ்சாரம் திருக்கணிதத்திற்கும் வாக்கிய கணிதத்திற்கும் சுமார் 4 மாதங்கள் வரை வித்தியாசம் ஏற்படும். இது இயல்பானது. திருக்கணிதப்படி மாசி மாதம் 17ஆம் தேதியன்று பூரட்டாதி 3ஆம் பாதத்திற்கு சனி பிரவேசித்து விட்டார். ஆனால் வாக்கியப்படி அடுத்த வைகாசி மாதம் 8ஆம் தேதி தான் பூரட்டாதி 3ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 4 மாதங்கள் மட்டுமே. அதிலிருந்து சுமார் 40 நாட்களுக்குள் 4ஆம் பாதத்தில் பிரவேசிக்கும்போது ராசி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதன்படி திருக்கணிதத்தில் பங்குனி 14ஆம் தேதியில் ராசி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்போது சனிக்கு வக்கிரம் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சனி நின்ற வீட்டிற்கு 5ல் சூரியன் வரும் போது தான் வக்கிரம் ஏற்படும்.இங்கு இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் வக்கிரம் ஏற்படவில்லை. அதனால் எந்த தடையும் இன்றி சனி ராசி மாறி விட்டார்.
ஆனால் வாக்கியத்தில் அப்படி இல்லை. வைகாசி 8 ஆம் தேதியில் பூரட்டாதி 3ல் இருந்து 40 நாட்களுக்குள் அதாவது ஆனி 18க்குள் 4ஆம் பாதத் திற்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் ஆனி 1ஆம் தேதியில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு 5ல் சூரியன் வந்துவிட்டார். அதுமுதல் சனியின் முன்னோக்கி செல்லும் வேகம் குறைந்து ஆனி 18ல் வக்கிரம் ஆகிவிட்டார். இதனால் அடுத்த ராசிக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் கார்த்திகை 1ல் வக்கிர நிவர்த்தி அடைந்து படிப்படியாக முன்னோக்கி சென்று மாசி 22ல் (6-3-2026) தான் மீனராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணிதப்படி ஆனி 29ல் வக்கிரம். அதற்குள் சனி மீன ராசியில் சுமார் 8 பாகை முன்னே சென்று விட்டார். அதனால் வக்கிரம் அடைந்தும் கூட மீனத்திலேயே பின்னோக்கி வந்து பின் வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி செல்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் இரண்டிற்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டது என்று.
சிலர் இதற்கு முன்பெல்லாம் இரண்டு பெயர்ச்சிக்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்படவில்லை.வாக்கிய கணிதத்தில் பிழை ஏற்பட்டதால் தான் கடந்த 2,3 பெயர்ச்சிகளில் இதுபோல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். திருக்கணிதம் துல்லியமானது. வாக்கியம் இன்னும் துல்லியப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் பெயர்ச்சியில் வரும் இந்த வேறுபாடு இப்போது தான் ஏற்பட்டதல்ல. காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு வேறுபாடு ஏற்பட்ட காலங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
கடந்த 8-4-1966ல் திருக்கணிதப்படி கும்பராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆன போதிலும், வாக்கியப்படி 11-3-1967ல் தான் பெயர்ச்சி ஆனது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் 1 வருடம். அதுபோல் 15-6-1968ல் திருக்கணிதப்படி மேஷத்திற்கு பெயர்ச்சி; வாக்கியப்படி 27-4-1969ல் தான் பெயர்ச்சி. இரண்டிற்கும் சுமார் 10 மாதம் வித்தியாசம். ஆனால் அடுத்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சியான தேதியை பார்த்தால் திருக்கணிதம் 27-4-1971; வாக்கியம் 3-6-1971. இரண்டிற்கும் வித்தியாசம் சுமார் 40 நாட்கள் மட்டுமே. அதுபோல் 1973ல் 30 நாள்; 1975ல் 26 நாள்;1977ல் 20 நாள்;1979ல் 28 நாள்;1982ல் 25 நாள் மட்டுமே இரண்டிற்கும் வித்தியாசம் ஏற்பட்டது. அதன் பின்னர் 1984 முதல் 1996 வரையிலான காலத்தில் ஏற்பட்ட பெயர்ச்சிகளில் மீண்டும் சுமார் 10 மாதம் முதல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்பட்டது. பிறகு 1998,2000 ஆகிய வருடங்களில் இந்த வித்தியாசம் 2 மாதமாக குறைந்தது. பின்னர் 2002,2004,2006 ஆகிய வருடங்களில் 10 மாதங்களுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட்டு,2009,2011,2014 ஆகிய வருடங்களில் 18 முதல் 46 நாட்களாக குறைந்தது.2017 முதல் 2028 வரை இந்த வித்தியாசம் மீண்டும் அதிகரித்து 2030ல் குறைய உள்ளது.எனவே சனிப் பெயர்ச்சியில் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் ஏற்படும் வித்தியாசமானது எப்போதும் நடைமுறையில் இருக்கக்கூடிய வித்தியாசமே ஆகும் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள்.
ஆகவே, அவரவர் எந்த கணித முறையை கடைப்பிடிக்கிறீர்களோ அதன்படி சனிப்பெயர்ச்சிக்கான தேதியையும் பலன்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வதே சாலச்சிறந்ததாகும்.அதை விடுத்து திருக்கணிதக்காரர்கள் வாக்கியத்தை குறை சொல்வதும், வாக்கியக்காரர்கள் திருக்கணிதத்தை குறை சொல்வதும் நல்ல ஜோதிடருக்கு அழகல்ல.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·