- · 5 friends
-
I
மா.நன்னன் (Ma. Nannan) பிறந்த தினம் ஜூலை 30
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் எழுத்தாளருமான மா.நன்னன் (Ma. Nannan) பிறந்த தினம் ஜூலை 30.
வாழ்நாள் முழுவதும் தமிழை தனது முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் புலவரும் முதுபெரும் தமிழ் அறிஞருமான மா.நன்னன். இவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துகுடல் என்னும் ஊரில், கடந்த 1924ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை நன்னன் என மாற்றிக் கொண்டார்.தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, கல்லூரியில் பேராசிரியராக இருந்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார். ஓய்வு பெற்ற பிறகு நேரடியாகவே தமிழ்த் தொண்டு ஆற்றினார்.பொதிகைத் தொலைக்காட்சியில் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பில் சுமார் 17 ஆண்டுகள், எளிய முறையில் சாமானிய மக்களுக்கும் தமிழையும், அதன் இலக்கணத்தையும் எடுத்துச் செல்லும் வகையில் கற்பித்தல் சேவையை செய்தார். எழுத்தறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையையே உருவாக்கியவர்.படைப்புகளும், கொள்கைகளும்:1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். 'எல்லோருக்கும் தமிழ்', 'தவறின்றி தமிழ் எழுதுவோம்', 'தமிழ் எழுத்தறிவோம்', 'கல்விக்கழகு கசடற எழுதுதல்', 'உரைநடையா? குறைநடையா?' ஆகிய நூல்கள் அவரது படைப்புகளில் முக்கியமானவை.பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர் நன்னன். கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, கலப்பு திருமணம், எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். பெரியாரிய சிந்தனைகளை ஆதரித்த நன்னன், சமூகம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில், பெரியாரைக் கேளுங்கள் என்ற நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் பிரிவில் பரிசு பெற்றது. 'இவர்தாம் பெரியார்', 'பெரியார் கணினி' ஆகிய நூல்களை எழுதினார். மேலும், "பெரியாரியல்" என்ற பெயரில் மொழி, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும், திராவிட இயக்க உணர்வு பெற்ற பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களிலும் பங்கேற்றார். ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழித்து போராடியபோது, கைதாகி சிறை சென்றார். சமூகம், அரசியல் உள்ளிட்டவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார்.
எல்லா எழுத்தாளர்களும் எழுதுகோலைக் கீழே வைக்கிற காலத்தில் நான் எழுதுகோலை எடுக்கிறேன்” என்றவர் தமிழறிஞர் மா.நன்னன். ஆனால், இன்று அவருடைய எழுதுகோலை முழுமையாகப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டான் காலன்.
மறைமலை அடிகளும் பரிதிமாற்கலைஞரும் தம் பெயர்களை மாற்றிக்கொண்டதுபோல் நன்னனும் திருஞானசம்பந்தன் என்கிற தன்னுடைய பெயரை, ‘நன்னன்’ என்று மாற்றிக்கொண்டார். பெயரை மட்டும் மாற்றம் செய்யவில்லை நன்னன். தமிழ் மொழிக்காகப் பல மாற்றங்களைச் செய்தார். அதைச் சுவைபட எழுதுதல் குறித்துப் பாடமெடுத்தார்; பயிற்சி கொடுத்தார்.
“நீந்தினால்தான் பள்ளியில் சேர்ப்பார்கள்!”
இப்படித் தமிழுக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் வளர்ந்து மறைந்த நன்னன், தன் ஆரம்பக்கால கல்வி குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். எல்லோருக்கும் விவசாயம் மட்டுமே தெரிந்த எங்கள் ஊரில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஏதோ விரோதம். அன்றைய காலத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தாலும் இருப்பார்களே தவிர, எதிரிகளின் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்க்க மாட்டார்கள். இதனால், என்னையும் என் பெற்றோர்கள் அந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை. எங்கள் ஊரில் மணிமுத்தாறு ஒருபக்கமும் வெள்ளாறு மற்றொரு பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும். இந்த ஆறுகளில் எங்கள் ஊர் பிள்ளைகள் எல்லோருக்கும் நீந்தத் தெரியும். ஏனெனில், குழந்தைகள் நன்றாக நீந்தினால்தான் பள்ளியிலேயே சேர்ப்பார்கள். நீச்சலுக்குப் பிறகு நானும் அருகில் இருந்த திருமுட்டம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்” என்று ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார் மகிழ்ச்சி பொங்க.
“இங்கேயே விட்டுட்டுப் போங்க!”
அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்த நன்னன், பிறகு குடும்பத்தினருடன் இணைந்து விவசாயம் செய்துகொண்டிருந்தார். இந்தச் சூழலில், தங்கள் வீட்டில் செய்த வெல்லக்கட்டிகளை விற்பதற்காகத் தன் தந்தையாருடன் சிதம்பரத்துக்குச் சென்றார் நன்னன். அங்கே, மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருவரும் சாப்பிட்டபோது, நன்னனின் தந்தையிடம்... சோமசுந்தரம் பிள்ளை, “என்ன செய்கிறார் உம் மகன்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “எங்கள் அப்பா குடும்பம் பார்க்கிறான்” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த சோமசுந்தரம் பிள்ளை, “என்ன, குடும்பம் பார்க்கிறானா. குடும்பத்தைப் பார்க்கத்தான் நீங்க இருக்கீங்க. உங்க மூத்த பிள்ளைங்க இருக்கிறாங்க. அப்புறம் என்ன” என்று வினவியதோடு, “இவனை இங்கேயே படிக்க விட்டுட்டுப் போங்க” என்று கண்டித்துள்ளார்.
“வாழ்க்கையில் நிலைக்கப் படிக்க வேண்டும்!”
அதன் காரணமாக, அந்த ஊரில் இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்வதற்கான புதுமுகத் தேர்வுக்குத் தயார் செய்கிற பள்ளி ஒன்றில் நன்னன் சேர்க்கப்பட்டார். அவரைப்போலச் சில பையன்களோடு மாதம் ஐந்து ரூபாய் சாப்பாட்டுக்கு ஓர் ஆச்சியம்மா வீட்டில் தங்கிப் படித்தார் நன்னன். இங்கு படித்த அந்த வசந்தகாலம் பற்றி அவர், “எட்டாம் வகுப்புப் படித்ததோடு வந்திருந்தால் நான் அப்போதே ஓடியிருப்பேன். ஆனால், இரண்டு ஆண்டுகள் விவசாயத்தில் அதிகம் உழைத்ததால், இந்தச் சுகமான வாழ்க்கையில் ஓர் ஆர்வம் வந்துவிட்டது. இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டுமென்றால் படிக்க வேண்டும். அதனால் எனக்குப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. அப்புறம் படித்தேன்; நன்றாகப் படித்தேன்” என்று குறிப்பிடுகிறார்.
“எனக்கு உதவுவது புலவர் படிப்புதான்!”
இப்படிக் கஷ்டப்பட்டுப் படித்த நன்னன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மாணவனாகத் தேறியபோது உ.வே.சாமிநாத ஐயர் அவருக்கு 50 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். அந்தப் பணத்திலும் தன்னுடைய இறுதியாண்டுப் படிப்புக்கான புத்தகங்களை வாங்கிக் குவித்த நன்னன், மேலும் 20 புத்தகங்கள் வாங்குவதற்கான ஒரு பட்டியலை உ.வே.சா-விடம் அளித்தார். அவர் கேட்ட புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் உ.வே.சா. படிப்பில் நன்கு கவனம் செலுத்திப் படித்த நன்னன், பின்னாளில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்று பல மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்தினார். ‘தமிழ்ப் புலவர்’ குறித்து அவர் சொன்னபோது, “எனக்கு இப்பவும் உதவி செய்வது என் புலவர் படிப்புதான்” என்றாராம்.
‘குங்கும’த்தில் எழுதச் சொன்ன கருணாநிதி!
“ ‘தேர்தலில் வெற்றிபெற்றதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்’ என்றால், ‘இந்தத் தேர்தலில் தோற்றுப்போய்விடுவாய், எப்படி வெற்றிபெற்றாய்’ என்று கேட்டதாகும். ‘நீங்கள், நலமுடன் இருப்பதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்’ என்றால், ‘நீ செத்துப் போயிருப்பாய் என்று நினைத்தேன். நீ எப்படி உயிருடன் இருக்கிறாய்’ என்று பொருள். இதை, தவறாக எல்லோரும் பயன்படுத்துகிறோம். ‘இறும்பூது’ என்பதற்கு ஆச்சர்யம், வியப்பு, அதிசயம் என்று பொருள். அதற்கு, ‘மகிழ்ச்சி’ என்று பெரிய அறிஞர்கள்வரை நினைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை ஒரு கூட்டத்தில் சொன்னேன். அதைக் கேட்ட மு.கருணாநிதி, ‘இதை எல்லாம் நீங்கள் குங்குமத்தில் எழுதுங்கள்’ என்று சொன்னார். நானும் குங்குமத்தில் தொடர்ந்து எழுதினேன்” என்று ஒரு பேட்டியின்போது சொல்லியிருக்கிறார் நன்னன்.
நன்னன் உருவாக்கிய புதிய முறை!
பிற்காலத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப் பணியாற்றிய நன்னன், ‘மூவாண்டு முனைப்புத் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். இதில், ‘தமிழை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று ஆணை வெளியிட்டார். இதற்கு, ‘எங்களிடம் தமிழ் டைப்ரைட்டர் இல்லை’, ‘தமிழ் அகரவரிசை இல்லை’, ‘ஆட்சிச் சொல் அகராதி இல்லை’ என்று பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து தமிழுக்காக வாழ்ந்த நன்னன், எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கினார்.
சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’, ‘தமிழறிவோம்’, ‘உங்களுக்காக’ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கிய நன்னன், ‘உரைநடையா... குறைநடையா’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவமின்றித் தமிழ் எழுதுவோம்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக்கு அழகு கசடற எழுதுதல்’ எனத் தமிழுக்காகப் பல நூல்களை எழுதியுள்ளார்.
“அப்பளம் உடைந்துவிடும்!”
“தொலைக்காட்சியில் அவர் பாடம் நடத்தும் அழகே தனி” என்று அவருடைய மாணவர் ஒருவர் சொல்கிறார். “வகுப்பில் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் பிடிக்காது. ஆனால், இவர் எத்தனை மணி நேரம் பாடம் நடத்தினாலும் அதைக் காதுகொடுத்து கேட்க மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பர். ‘அப்பளம்’ என்கிற வார்த்தையைக்கூட அழகாய் உச்சரிப்பார். ஆம், அந்த வார்த்தையை எழுதும்போது ‘ப்’ என்ற எழுத்தின் மீது வைக்கும் புள்ளியைக்கூட அழுத்திவைக்க வேண்டாம் என்பார். அழுத்திவைத்தால், அப்பளம் உடைந்துவிடும் என்று நகைச்சுவையுடன் பாடம் நடத்துவார்” என்கிறார் அந்த மாணவர்.
இவரது வாழ்க்கைத் துணைவி ந. பார்வதி. இவருக்கு வேண்மாள், அவ்வை என்ற மகள்கள்; இவர் மகன் அண்ணல், மருத்துவப் படிப்பு முடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே மருத்துவமும் பார்த்து வந்தார். மூட்டு வலிக்கான புதிய மருந்து பற்றிய ஆய்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில் திடீரென்று இறந்தார். தம் மகன் அண்ணல் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நடத்தி மாணவர்களுக்குப் பரிசும் அவர்களது பள்ளிகளுக்குச் சான்றிதழும் வழங்கி வந்தார்.
சென்னை மாநகரின் சைதாப்பேட்டையில் இருந்த தன் இல்லத்தில் வாழ்ந்துவந்த நன்னன், 7 நவம்பர் 2017 அன்று தன் 95-ஆம் அகவையில் காலமானார். அவர் உடலுக்கு அன்றைய தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின், திக தலைவர் கி. வீரமணி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு உள்ளிட்ட அரசியலர்களும் சிலம்பொலி செல்லப்பன், ஈரோடு தமிழன்பன் ஆகிய எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்தினர். மறுநாளான நவம்பர் 8 அன்று அவர் உடல் தியாகராய நகரிலுள்ள கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் தொண்டாற்றிய தமிழ் அறிஞர் நன்னன், தமிழ் மொழி இருக்கும் வரை நிலைத்திருப்பார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·