- · 5 friends
-
I
படித்து நெகிழ்ந்தேன்
2005 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், புதிய வேலையில் சேர்ந்த இருந்தேன், வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக நிற்பேன்.
Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும் Tempo Traveller வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.
ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை, சில நேரங்களில் நடந்து போயிருக்கிறேன், அன்றைய நாளில் அத்தனை தெம்பில்லை என்று நினைக்கிறேன்.
எப்படி வீடு திரும்புவது என்பது குறித்து நீண்ட நேரம் யோசித்தபடி நின்றிருந்தேன். பிறகு பொம்மனஹள்ளியில் இறங்கி புத்தகங்கள் விற்கும் கடைக்காரத் தம்பியிடம் காசு வாங்கிக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து ஒரு Tempo Traveller வண்டியில் ஏறி அமர்ந்து விட்டேன்.
பயணம் முழுவதும் பலவிதமான குழப்பங்கள், தம்பியின் கடை திறந்திருக்க வேண்டும், கேட்டவுடன் அவன் 5 ரூபாயைக் கொடுத்து விட வேண்டும்.
ஓட்டுனர் ஏதாவது கோபத்தில் திட்டி விடக்கூடாது, இதுபோன்ற ஒரு சூழலில் பயணிக்கத் கூடாது, என்றெல்லாம் குழப்பமான துயர் படிந்த அச்சத்தோடு அந்தப் பயணம் முடிவுறும் நேரம் வந்து விட்டது.
எல்லாப் பயணிகளும் இறங்கும் வரை காத்திருந்து விட்டு அந்த ஓட்டுனரிடம் வந்து நின்று, "அண்ணா, மன்னியுங்கள், கடை வரைக்கும் போய் காசு வாங்கிக் கொண்டு வருகிறேன்".
அந்த ஓட்டுனர் என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார், அமைதியாக இருந்தவர், "பரவாயில்ல தம்பி, கதவை நல்லா சாத்தீட்டுப் போய்ட்டு வாங்க". அந்த மனிதரின் பார்வையில் சக மனிதனின் துயரத்தைப் படிக்கும் ஒரு மெல்லிய நேசமிருந்தது.
அந்த அனுபவம் எனக்கு ஒருவிதமான நெகிழ்ச்சியை உருவாக்கி இருந்தது. மனிதர்கள் எங்கிருந்தாலும் சலனமற்றுப் பிற மனிதர்களின் துயரங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த நேசத்தின் நிழல்தான் பேரண்டத்தின் அச்சாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. இந்த அச்சைத்தான் மனிதர்கள் கடவுள் என்று பெயரிடுகிறார்கள் போல என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு நவீன மகிழுந்து வாங்கி இருந்தேன், அதே சாலையில் நாள்தோறும் அலுவலகத்துக்குப் பயணம் செய்வேன்.
நாள்தோறும் அந்த Tempo Traveller ஓட்டுனரை நினைத்துக் கொள்வேன், வீடு திரும்பும் போது பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற முதியவர்களை "நீங்கள் எங்கே போக வேண்டும்" என்று கேட்டு ஏற்றிக் கொள்வேன். அவர்களது நிறுத்தங்களில் இறக்கி விடுவேன். அது அந்த ஓட்டுனருக்கு செய்கிற நன்றிக் கடன் என்று நினைத்துக் கொள்வேன்.
ஏறத்தாழ மறுபடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சாலையில் "Kendriya Sadhan" இல் ஒரு வேலையை முடித்துக் கொண்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து "ஐயா" என்றொரு குரல்.
விசுக்கென்று திரும்பிப் பார்த்தால் மெலிந்த எலும்புகள் வெளியே தெரிகிற மாதிரியான தோற்றத்தோடு ஒரு அம்மா என்னை அழைத்தார். அவர் யாசகம் கேட்கிறவரைப் போல இல்லை.
அருகில் போய் "என்ன ஆச்சு அம்மா?" என்றேன். என் கையில் ஒரு மருந்துச் சீட்டைக் கொடுத்தார், St.Johns மருத்துவமனையின் இலவச மருத்துவப் பிரிவு சீட்டு, நான்கைந்து மருந்துகளும் ஒரு Protinex டப்பாவும் எழுதி இருந்தார்கள். அவர் ஏன் என்னைத் தேர்வு செய்து அழைத்தார், என்னிடம் ஏன் அந்த மருந்துச் சீட்டைக் கொடுத்தார் என்று தெரியவில்லை.
சட்டைப் பைக்குள் கையை நுழைத்து ஒரு இருநூறு ரூபாய்த்தாளை எடுத்து அவரிடம் கொடுக்கப் போனேன், அவர் மெல்லிய குரலில் என்னால் நடக்க முடியவில்லை தம்பி, நீயே இதிலிருக்கும் மருந்தை வாங்கிக் கொடுத்தால் நன்றியுடையவளாக இருப்பேன், பணம் வேண்டாம்"
வறுமை, பிணி, மூப்பு எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் பணம் வேண்டாம் என்று சொல்கிற ஒரு சுயமரியாதை இருந்தது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஓட்டுனரிடம் பேசும்போது எனக்கிருந்த அதே ததும்பும் கூச்சமும், துயரமும் அவரது முகத்தில் இருந்ததைப் பார்த்தேன்.
அந்த 20 வருடத்துக்கு முந்தைய உரையாடல் திரும்ப நிகழ்ந்து கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன், நான் அந்த ஓட்டுனரிடம் கைகளைக் கூப்பவில்லை, ஆனால் இந்தத் தாயோ கைகளை என்னை நோக்கிக் கூப்பியபடி இருந்தார்.
அவரது கைகளைப் பிடித்து மெல்லக் கீழறிக்கி விட்டு, "அம்மா, இங்கேயே அமர்ந்திருங்கள், நான் மருந்துகளை வாங்கி வருகிறேன்" என்றபடி மூடியிருந்த ஒரு கடையின் படிகளைக் காட்டிவிட்டு மருந்துக் கடையைத் தேடி நடந்தேன்.
பகல் உணவுக்குப் பிறகு பெரும்பாலான கடைகளை இரண்டு மணிநேரம் மூடி விடுவார்கள். அலைந்து திரிந்து கடைசியாக ஒரு குறுகிய சந்தில் திறந்திருந்த மருந்துக் கடையைப் பார்த்தேன்.
இரண்டு மார்வாடி இளைஞர்கள், மருந்துகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள், மருந்துச் சீட்டைக் கொடுத்தவுடன் "எல்லா மருந்தும் கொடுக்கவா சார்", என்றவனிடம் "எவ்வளவு ஆகும் தம்பி?" என்றேன்.
அமர்ந்தவன் கணக்குப் போட்டபடி, Protinex சிறியதா? பெரியதா? என்றான். "பெரியதென்றால் ஒரு மாதம் வரும்" என்று கூடுதல் தகவல் கொடுத்தான்.
"பெரியதே இருக்கட்டும் தம்பி".
"776 ரூபாய், இந்த மூன்றாவது மருந்து மட்டும் வேறு Company இருக்கிறது? கொடுக்கட்டுமா?"
"தெரியலையே தம்பி, போய்க் கேட்டுவிட்டு வரட்டுமா?"
"யாருக்கு வாங்குறீங்க சார்?"
"தெரியல தம்பி, ஒரு வயசான அம்மா, வாங்கி வரச்சொன்னார்கள்."
என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தவன், அமைதியாக கணிப்பொறியில் ஏதோ தட்டச்சினான். கையில் இரண்டு சீட்டுகள் கொடுத்தான்.
Wallet இல் இருந்து இரண்டு 500 ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினேன், ஒன்றை வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டு சிரித்தான். இன்னொரு தாளை என்னிடமே திருப்பிக் கொடுத்தான்.
அவன் பங்குக்கு 276 ரூபாய். நான் அமைதியாக நின்று அவன் முகத்தைப் பார்த்தேன். நானாவது நேரடியாக உதவி கேட்கப்பட்டவன், ஆனால், அவன் எனது சொற்களை மட்டுமே நம்பினான்.
சக மனிதர்களின் துயரத்தை நேரடியாக உணர்ந்து உதவுகிற நம்மைப் போன்றவர்களை விட, வெறும் சொற்களை நம்பி, அந்த சொற்களின் ஈரத்தை உணர்ந்து எடுத்துக் கொடுக்கிற மனிதன் மகத்தானவன் இல்லையா?
நான் நெகிழ்ந்து நீண்ட நேரம் அங்கே நிற்க முடியாதவனாக அந்த இளைஞனைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி நகரத் துவங்கினேன்.
அந்த முதிய தாய் அங்கேயே அமர்ந்திருந்தார்கள், மருந்துகளைக் கொடுத்து விட்டு மீண்டும் அந்த சட்டைப்பையிலிருந்த 200 ரூபாய் நோட்டையும் கைகளில் வைத்து அழுத்திவிட்டு நடக்கத் துவங்கினேன்.
அந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது, அந்த சக மனிதர்களின் வலியை உணர்ந்து கொஞ்சமாக நெகிழ்ந்து போகிற மனிதர்கள் இன்னமும் அந்த சாலையில் நடக்கிறார்கள்.
பூமியின் உள்ளிருக்கும் குழம்பு இப்போது எதிர்த்திசையில் சுழலத் துவங்கி இருப்பதாக யாரோ சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஆனால், கருணையும், இரக்கமும், சக மனிதர்களின் துயரத்தை உணர்ந்து கொள்கிற பேரண்டத்தின் அச்சும் ஒரே திசையில் தான் சுழல்கிறது அல்லவா?
அந்த ஓட்டுனரிடம் இருந்துதான் நான் அந்த உடைக்க முடியாத மாய அச்சைப் பிடித்துக் கொண்டு வந்தேன், பிறகு என்னிடம் இருந்து அந்த அச்சை லாவகமாகப் பிடித்துக் கொண்ட அந்த மார்வாடி இளைஞனின் புன்னகை, அதுதான் கடவுளின் சாயல் என்று பலரும் சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்புகளற்ற கருணையைப் புரண்டோடச் செய்கிற பேரன்பு தானே கடவுள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·