'கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்' என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் அவதரித்து தமிழுக்கும் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த ஊர். ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குத் தங்கக் கோபுரம் வேயும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஶ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள் பற்றிக் கூறுகிறார்.
* தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.
* ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவது, ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள் கோயில்.
* இந்தக் கோயில் கோபுரம் 196 அடி உயரமும் 11 நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டது. இந்தக் கோபுரத்தில் சிலைகள் எதுவும் கிடையாது. தமிழக அரசின் சின்னமாக இந்தக் கோயிலின் கோபுரம் விளங்குகிறது.
* தமிழகத்திலேயே பெரியாழ்வார், பெரிய கோயில், பெரிய குளம், பெரிய பெருமாள், பெரிய கோபுரம், பெரிய விமானம், ஆகியவற்றைக் கொண்ட ஸ்தலம். இங்குள்ள மாரியம்மன் கோயில்கூடப் பெரிய மாரியம்மன் கோயில் என்றுதான் அழைக்கப்படுகிறது. பெரிய கூரை வேயப்பட்ட கோயில் இது.
* பெருமாள் கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத ஓர் அதிசயத்தை இங்கு காணலாம். பொதுவாக, தாயார் சந்நிதி தனியாகத்தான் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான் பெருமாளுடன் தாயாரும் ஒரே சந்நிதியில் இருப்பார்கள்.
* எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவருமாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது.
* எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கும்.
* கள்ளழகரிடம் ஆண்டாள், திருவரங்கம் ரங்கநாதனை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் நூறு தடா வெண்ணெய்யும் நூறு தடா அக்கார அடிசிலும் உனக்குப் படையலிடுகிறேன் என்று சொல்லி வேண்டிக்கொள்வார்.
* ஆண்டாள் அவதரித்து சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய ராமாநுஜர் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் ராமாநுஜரை 'வாங்கண்ணா கோயில் அண்ணா' எனச்சொல்லி ஆண்டாளே எழுந்து வந்து வரவேற்றதாக ஐதிகம். அதனால்தான் மூலவரிடமிருந்து ஏழாவது அடியில் ராமாநுஜருக்கு தங்கச்சிலை வைத்திருப்பார்கள்.
* 108 திவ்யதேசங்களில் 56 வது திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் தெய்வம் வடபத்ரசாயி ஆலமரத்தில் சாய்ந்து இருப்பார்.
* ராமாநுஜர், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் இவர்கள் மூவருடனும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தொடர்பு உண்டு. வேதாந்த தேசிகர், ஶ்ரீவில்லிபுத்தூர் குறித்து 29 பாசுரங்கள் பாடியுள்ளார். மணவாளமாமுனிகளுக்காக மார்கழி மாதம் முடிந்ததும் 'எண்ணெய்க்காப்பு உற்சவம்' என்று ஒரு உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.
* இங்குள்ள ஆண்டாள் கிளி மிகவும் விசேஷமானது. ஆண்டாள் ரங்கனை மணப்பதற்காக மூன்று பேரைத் தனித்தனியாக தூது அனுப்புகிறார். முதலில் மழையைத் தூதாக அனுப்புகிறார். மழை பெருமாளின் பேரழகைப் பார்த்ததும் பொழிந்து சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுகிறது.
அடுத்ததாக வண்டைத் தூது அனுப்புகிறார். வண்டு, பெருமாளின் மாலையில் இருக்கும் தேனை அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிக் கிடந்து விடுகிறது. அடுத்ததாகத்தான் கிளியைத் தூது அனுப்புகிறார். 'சொன்னதைச் சொல்லுமாம் கிளி.' கிளி தவறாமல் ஆண்டாள் சொன்னதைச் சொல்ல ரங்கமன்னர் ஆண்டாளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் இங்குள்ள 'ஆண்டாள் கிளி' மிகவும் விசேஷம்.
* ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். திருவரங்கம் பெருமாள் ரேவதி நட்சத்திரம். கருடாழ்வார், சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். பூரம், ரேவதி, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மிகவும் விசேஷமான க்ஷேத்திரம்
* ஆண்டாள் பிறந்த நந்தவனம் இப்போதும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நந்தவனம் மிகவும் விசேஷமான ஒன்று.
* 33 அடி உயரமுள்ள தங்க விமானம் ஏறக்குறைய 100 கிலோ அளவில் தங்கத்தால் வேயப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய கோபுரம், பெரிய விமானம் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலைத்தான் ஆண்டாள் திருக்கோயிலைத்தான் சொல்ல முடியும். 2016 -ம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
* எப்போதும் வைர வைடூரிய நகைகளுடன் இருக்கும் பெருமாள் ஆண்டாள் மாலையை அணிந்துகொள்ளும்போது எந்தவித ஆபரணங்களும் இல்லாமல் சாதாரண வேஷ்டியுடன்தான் ஆண்டாளின் மாலையைப் பெற்றுக்கொள்கிறார். திருமலையில் இது மிகப்பெரிய வைபவமாகவே நடைபெறுகிறது. இதற்காகத் திருப்பதி பிரமோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மாலை திருமலைக்குச் செல்வது பெரிய விழாவாகவே இங்கு நடைபெறும்.
* பாண்டிய மன்னன் வல்லபதேவனின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு கோயில் கோபுரத்தைப் பெரியாழ்வார் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனம் அமைத்து, பராமரித்து வந்தார். அதிலிருந்து பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து வந்தார். நந்தவனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பூமாதேவியின் அம்சமாக ஆண்டாள் அவதரித்தார்.
* ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரத்தின்போது இழுக்கப்படும் அழகியதோர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ம் நாள், தேரோட்டம் நடைபெறும். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய விழா.
* பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் பிரசித்திபெற்றதாகும். பல்வேறு ஊரிலிருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமிதித் திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.
* அரங்கனை மணந்த ஆண்டாள் பாடிய பிரபந்தங்கள் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வேதத்தின் சாரம் எனவும் 'சங்கத் தமிழ் மாலை' என்றும் போற்றப்படுகிறது.
* தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்விக்க அடிமை கொள்வதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுகிறார்.
* ஆண்டாள் தான் பிறந்த ஊரை ஆயர்பாடியாகவும் தன்னை கோபிகையாகவும் எண்ணி பாடியதால் இங்கு பால் வளம் பெருகியது. இன்றளவும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது.