Feed Item
Added a news 

எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம். என்னை கொலையும் செய்யலாம். உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்ஷர்களுக்கே. மஹிந்த ராஜபக்ஷ போன்று இந்த நாட்டுக்கு இதுவரை எவரும் சேவை செய்யவில்லை. இனியும் செய்யப் போவதுமில்லை என்று பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைய முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதுடன் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிற்போடப்படப்பட்ட குறித்த தேர்தல் எப்போது இடம்பெறும் என்பது தெரியாது. இந்த தேர்தல் இடம் பெறவில்லை எனில் நிச்சயம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும்.

எந்த தேர்தலுக்கும் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. நிச்சயம் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை எமது கட்சியிலிருந்து முன்னிறுத்துவோம். மொட்டுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் பொதுத் தேர்தல் மூன்றுக்கு முகங் கொடுத்துள்ளது. இந்த மூன்று தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே உள்ளது. நாமே அவருக்கு ஆதரவு வழங்கினோம். அடுத்த தேர்தல் வரும் வரையில் அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். இடைநடுவில் குழப்பத்தை தோற்றுவிக்க மாட்டோம்.

இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உருவாக்கிய கட்சியை உறுதியான கொள்ளைகளுடன் முன்னோக்கி கொண்டு செல்வோம். நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாக பொதுஜன பெரமுன காணப்படுகிறது. எதிர்காலத்தின் கட்சியின் எழுச்சிக்கு எமது பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர முன்னெடுத்து செல்வோம்.

எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம். என்னை கொலையும் செய்யலாம். எனது உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்ஷர்களுக்கே. மஹிந்த ராஜபக்ஷ போன்று இந்த நாட்டுக்கு எவரும் இதுவரையில் சேவை செய்ததில்லை. இனியும் செய்யப் போவதும் இல்லை என்றார்.

  • 446